

சென்னை: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.52,360 எனும் புதிய உச்சத்தை எட்டியது. சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம்தேதி பவுன் ரூ.42,280 என விற்பனையானது.
இதன் பிறகு, இஸ்ரேல் - பாலஸ்தீன தாக்குதல் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 எனும் புதிய உச்சத்தை அடைந்தது.
அதைத் தொடர்ந்து, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீரென உயரத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதற்கு அடுத்த நாள் (மார்ச் 29) ரூ.51,120 என புதிய உச்சத்தை அடைந்தது.
அதன்பிறகு, 2 நாட்கள் விலை குறைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.51,640 என்றும், 3-ம் தேதி ரூ.52,000 என்றும் புதிய உச்சத்தை அடைந்தன.
இந்நிலையில், நேற்று ஒரு கிராமுக்கு ரூ.45 என பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது. இதனால், ஒருகிராம் ரூ.6,545, ஒரு பவுன் ரூ.52,360என வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.7,015-க்கும், ஒரு பவுன் ரூ.56,120-க்கும் விற்கப்பட்டது. அதே நேரம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.84, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.84,000 என முந்தைய நாள் விலையே நேற்றும் தொடர்ந்தது. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வது நடுத்தர மக்களை கலக்கமடைய செய்துள்ளது.
இதுகுறித்து தங்கம், வைர நகை வியாபாரிகள் கூறியபோது, ‘‘வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீக்கம், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை, தங்கம் மீது முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்தல் என்பது போன்ற காரணங்களால் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதேபோல தொடர்ந்து விலை அதிகரித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருபவுன் தங்கம் ரூ.60,000-ஐ எட்டக்கூடும்’’ என்றனர்.