

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில்பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது. கடந்த 2023 பிப்ரவரி 2-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.44,040 என புதிய உச்சத்தை எட்டியது.
பின்னர், தங்கம் விலை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஆபரணத் தங்கம் விலை பவுன் ரூ.45,520-க்கும், ஜுன் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.46 ஆயிரத்துக்கும், டிசம்பர் 23-ம்தேதி ரூ.47 ஆயிரமாகவும் உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது.
பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரித்து, கடந்த பிப்ரவரி 5-ம்தேதி ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்துக்கும், இம்மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரத்தையும் தாண்டியது. கடந்த20 நாட்களாக ஒரு பவுன் தங்கம் ரூ.49,100-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.49,800 என்ற அளவில் விற்பனையாகி வந்தது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், தங்கம் விலை 2-வது நாளாக ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6.390-க்கும், பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.51,120 ஆகவும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் விலை பவுன் ரூ.54,880-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை: ஒரு கிராம் வெள்ளி நேற்றுரூ.80.80-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.80,900 ஆக இருந்தது.
தங்கம் விலை அதிகரித்து வருவது குறித்து, நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள தலைமை வங்கியான ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாமல் உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் வங்கியில் உள்ள தங்களது பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்.
இதேபோல, உள்நாட்டிலும் மக்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, மக்களவை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
தங்க முதலீடு அதிகரிப்பு: இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களும் பங்குகளை விற்றுவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இத்தகைய காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றம் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, சில வாடிக்கையாளர்கள் கூறும்போது, ‘‘தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தங்க நகைகள் என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது. ஆனால், அதிகரித்து வரும் விலை உயர்வால் தங்கம் வாங்குவது பெரிய சுமையாக அமைந்துள்ளது’’ என வேதனை தெரிவித்தனர்.