

கோவை: திருத்தியமைக்கப்பட்ட எம்எஸ்எம்இ சட்டம், 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜாப் ஒர்க் பணிகளுக்கு பணம் செலுத்த காலதாமதம் செய்யும் நிறுவனங்கள் கூடுதல் வருமானவரி செலுத்த நேரிடும்.
நாட்டின் மொத்த தொழில் வளர்ச்சியில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் இத்தகைய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள்,பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை ‘ஜாப் ஒர்க்’ அடிப்படையில் பணி ஆணை பெற்று தயார் செய்து அளித்து வருகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு குறித்த காலத்தில்பெரிய மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பணத்தை வழங்குவதில்லை. இதனால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் எம்எஸ்எம்இ சட்டம் ( உதயம் திட்டம் ) 2006-ம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்த சட்டத்தை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, பெரிய நிறுவனங்கள் 15 நாட்களுக்குள் பணத்தை குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்தம் செய்திருந்தால் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் காலதாமதம் செய்யப்படும் காலத்திற்கு தற்போதுள்ள வங்கி வட்டி வகிதத்தில் இருந்து ( 6.75 சதவீதம் ) மூன்று மடங்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். தொழில் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் இந்த சட்டத்தை பலர் கடைபிடிப்பதில்லை. மறு புறம் உதயம் திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் சென்று விடும் என்பதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களும் கெடுபிடி காட்டுவதில்லை.
இத்தகைய சூழலில் திருத்தியமைக்கப்பட்ட சட்டம் 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31-க்குள்ஜாப் ஒர்க் பணிகளுக்கு பணம் செலுத்தாத நிறுவனங்கள் கூடுதல் வருமான வரி செலுத்த நேரிடும். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு குறு, சிறு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு, புதுச்சேரி பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜலபதி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் வரி செலுத்தும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் வழங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் குறு, சிறுநிறுவனங்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது. நிதி நெருக்கடி அதிகரித்துள்ளதால் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, பெரிய நிறுவனம் ரூ.5 லட்சம் செலுத்தாமல் இருக்கும் சூழலில், ஈட்டிய லாபத்தொகை ரூ.10 கோடிக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்றால் தற்போது கூடுதலாக குறு, சிறு நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5 லட்சத்திற்கும் சேர்த்து வருமான வரி செலுத்த நேரிடும். வரும் மார்ச் 31-க்குள் நிறுவனங்கள் பணத்தை செலுத்தினால் கூடுதல் வருமானவரி செலுத்துவதில் இருந்து விடுபடலாம்.
தற்போது வர்த்தகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திட்டம் மிகவும் உதவும் என்பதால் தங்களையும் இணைக்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெரும்பாலான குறு, சிறு தொழில் அமைப்பினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இத்தகைய கெடுபிடி காரணமாக உதயம் திட்டத்தில் பதிவு செய்யாத மற்ற நிறுவனங்கள் ஜாப் ஒர்க் பெற வாய்ப்புள்ளதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என சில தொழில் அமைப்பினர் கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து ‘காட்மா’ தலைவர் சிவக்குமார், ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர் கூறும்போது, “மத்திய அரசின்நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. காலதாமதமாக பணம்செலுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்” என்றனர்.
இது குறித்து ‘டாக்ட்’ கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறும் போது, “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள இந்த சட்டம் ஆண்டு மொத்த வணிகத்தில் உச்ச வரம்பு இல்லாமல் அனைத்து பெரிய நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் அமல் படுத்த வேண்டும். அப்போது தான் இத்திட்டம் அனைத்து குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும்” என்றார்.