Published : 24 Mar 2024 05:20 AM
Last Updated : 24 Mar 2024 05:20 AM

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்: அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.படம்: ம.பிரபு

சென்னை: மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது விருப்பு, ெவறுப்பின்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், ஐ.எஸ்.இன்பதுரை, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ரவீந்திரநாத், பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகநயினார், பீம்ராவ், தேமுதிக சார்பில் ஜி.சந்தோஷ்குமார், எஸ்.கே.மாறன், காங்கிரஸ் கட்சி சார்பில் சந்திரமோகன், எஸ்.கே.நவாஸ், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், கோபாலகிருஷ்ணன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஸ்டெல்லா மேரி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதுபற்றி அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

ஆர்.எஸ்.பாரதி (திமுக): வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி செய்துகொடுக்க வேண்டும். மெட்ரோ ரயில்கள், வந்தே பாரத் ரயில்களில் உள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். வாகன சோதனையின்போது ஆவணங்களை சரிபார்த்து உடனடியாக ரொக்க பணத்தை பொதுமக்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

டி.ஜெயக்குமார் (அதிமுக): தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாமலும் நடத்தப்பட வேண்டும். 85 வயது தாண்டிய முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் வாக்களிக்கும் சூழல் ஏற்படும்போது எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் வாக்குச்சாவடி அதிகாரிகள் செயல்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கராத்தே தியாகராஜன் (பாஜக): வாகனத்தில் பணம் எடுத்துச் செல்லும் போது ரு.50,000 என்பது ஒரு தனி நபருக்கா அல்லது ஒரு வாகனத்துக்கா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்): மத்திய அரசு தனது விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களில் பணியில் இருப்போர் போன்றோருக்கும் தபால் வாக்கு வழங்க வேண்டும்.

பீம்ராவ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தேர்தல் நேரத்தில் அமலாக்கத் துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருப்பது தவறு. வாக்குச்சாவடிகளில் மருத்துவ குழு நிறுத்தப்பட வேண்டும்.

சந்திரமோகன் (காங்கிரஸ்): உரிய ஆவணங்கள் காண்பித்தால் 48 மணி நேரத்துக்குள் உரியவரிடம் பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும். அமலாக்கத் துறை, வருமானவரித் துறை கைது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

ஜி.சந்தோஷ்குமார் (தேமுதிக): வாகன சோதனை பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும் மரியாதைக் குறைவாகவும் இருக்கக் கூடாது.

சத்தியமூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி): தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை மூடுவதை கைவிட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x