

புதுடெல்லி: இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் நேரடியாக தணிக்கை நடத்தியது. அப்போது, பணி நேர வரம்பு மீறல், தவறான நிர்வாக மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
குறிப்பாக, வாராந்திர ஓய்வு, நீண்ட தூர விமானங்களுக்கு முன்னும் பின்னும் போதுமான ஓய்வு போன்றவற்றில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி கடந்த மார்ச் 1-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனம் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்று கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிப்பதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.