Published : 22 Mar 2024 04:02 AM
Last Updated : 22 Mar 2024 04:02 AM

மதுரையில் 100 முன்னணி நிறுவனங்கள் ரூ.35 கோடி வரி பாக்கி - நடவடிக்கை என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சியில் வரி பாக்கி அதிகம் வைத்துள்ள ‘டாப்’ 100 நிறுவனங்களை ‘சீல்’ வைக்க ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுதால், அந்நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து வரியைச் செலுத்தி வருகின்றனர். அதனால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக ரூ.24 கோடி வரி வசூலாகி உள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலிமனைகள் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி, குத்தகை வரி மற்றும் கடைகள் வாடகை போன்ற பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு தான் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம், சாலை, குடிநீர் பராமரிப்பு மற்றும் விநியோகம், சுகாதாரப் பணிகள், பாதாள சாக்கடை சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இந்த சொத்து வரி முறையாக வசூலாவதில்லை. குறிப்பாக தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், `மால்'கள், அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள் போன்றவை மாநகராட்சிக்கு முறையாக வரியைச் செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன. இதனால் மாநகராட்சி-யின் வரி பாக்கி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் வரி வசூலை 15 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே அதற்கு தகுந்தார் போல் மத்திய அரசின் மத்திய நிதிக் குழு மானியம் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை மதுரை மாநகராட்சிக்கு கிடைக்கும். வரி பாக்கி அதிகரித்து வரி வசூல் மந்தமடைந்ததால் கடந்த காலத்தில் இந்த மானியத் தொகை மாநகராட்சிக்கு தொடர்ச்சியாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் புதிய மாநகராட்சி ஆணையராக பொறுப் பேற்ற தினேஷ்குமார், சொத்து வரிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை வசூல் செய்வதற்கு மண்டலம், வார்டு வாரியாக குழுக்கள் அமைத்து தீவிரப்படுத்தினார். அவரது இந்த நடவடிக்கைக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக வரி பாக்கி வைத்துள்ளோரைப் பட்டியல் எடுத்து அதில் அதிகமாக வரி பாக்கி வைத்துள்ள 100 நிறுவனங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த நிறுவனங்கள் மட்டும் ரூ.35 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. இதில் ஒரு சிலர் நோட்டீஸ் விட்டதுமே தாமாக முன்வந்து வரியைச் செலுத்தினர். சில பெரு நிறுவனங்கள், தங்களுடைய செல்வாக்கு, அரசியல் பின்புலம் ஆகியவற்றைக் காட்டி மாநகராட்சி நடவடிக்கைக்கும், அதன் நோட்டீஸுக்கும் அஞ்சவில்லை.

இதையடுத்து ஆணையர் தினேஷ்குமார், தமிழக அரசின் ஒப்புதல் பெற்று அந்த நிறுவனங்களை ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுத்தார். மாநகர காவல்துறை மூலம் அதற்கான நேரடி நடவடிக்கையில் இறங்கவே பதற்றமடைந்த அந்நிறுவன உயர் அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரடியாக வந்து பாக்கி பணத்தில் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை செலுத்தினர். இன்னும் சில `மால்'கள், பெரு நிறுவனங்கள் சில வழக்குகளில் கிடைத்த உத்தரவுகளை வைத்துக் கொண்டு மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன.

அந்த நிறுவனங்கள், `மால்'களின் வழக்குகளை தூசி தட்டி எடுத்து அந்த வழக்கு விசாரணையை மீண்டும் சந்திக்க மாநகராட்சி வழக்கறிஞர்கள் குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்குகளைக் காட்டி இனி மாநகராட்சிக்கு யாரும் வரி செலுத்தாமல் இருக்கும் வகையில் அனைத்து வழக்குகளின் பட்டியலையும் ஆணையர் எடுத்துள்ளார். இன்னும் சில பெரு மருத்துவமனைகள் அரசியல் அதிகார புள்ளிகளை கையில் வைத்துக் கொண்டு இழுத்தடித்து வருகிறார்கள்.

அவர்கைளையும் வரியை செலுத்த சில மறைமுக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற கடுமையான, அதிரடி நடவடிக்கை யால் ரூ.354 கோடி பாக்கியில் இந்த ஆண்டு ரூ.221 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.197 கோடி மட்டுமே வசூலானது குறிப்பிட த்தக்கது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரூ. 24 கோடி கூடுதல் வசூலாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1974-ம் ஆண்டு முதலான ரூ.9 கோடி பாக்கி வசூல்: மாநகராட்சிக்கு கடந்த 1974-ம் ஆண்டு முதலே சில நிறுவனங்கள் ரூ.9 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அந்த நிறுவங்களின் பட்டியல்களை எடுத்து அந்தத் தொகை முழுவதையும் ஆணையர் வசூலித்துள்ளார். ரூ.4 கோடி வரி பாக்கி வைத்துள்ள சில நிறுவனங்களை தற்போது வரை கண்டறிய முடியவில்லை. சில நிறுவனங்கள் உண்மையிலே வரி நிர்ணயத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.

சில நிறுவனங்கள், வரி வரிதிப்புக் குழுவிடம் முறையிடாமலே நீதிமன்றம் சென்று தடை ஆணைப் பெற்றுள்ளனர். இந்த உத்தரவை வைத்து, வரிகட்டாமல் உள்ளனர். மேயர், கவுன்சிலர்கள் உட்பட 10 பேர், ஆணையர் உள்ளிட்ட 10 பேர் உள்ளடக்கிய வரி விதிப்புக் குழுவிடம் முறையிட்டு அதில் தீர்வு காணப்படாவிட்டால் மட்டுமே நீதிமன்றம் செல்ல முடியும். அதை மீறிச் சென்ற நிறுவனங்கள் மீதான வழக்குகளை மீண்டும் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x