Published : 18 Feb 2018 02:25 AM
Last Updated : 18 Feb 2018 02:25 AM

தேசிய வாகன வரைவுகொள்கை வெளியீடு

தேசிய வாகன வரைவு கொள்கையை கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வாகனங்களால் எழும் மாசுபாட்டைக் குறைப்பதற்கு இந்த வரைவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தும் நான்கு மீட்டருக்கும் குறைவான சிறிய கார்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத் துறைக்கு ஆட்டோமொபைல் துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென இந்த வரைவு அறிவுறுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையில் குறிப்பிட்ட அளவு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களை பசுமை வாகனங்களாக மாற்றுவதில் சீனா, அமெரிக்கா, நார்வே மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் இந்தியாவை விட சிறப்பாகச் செயல்படுவதாக வரைவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வாகன உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபேம் திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டும். பாரத் ஸ்டேஜ் 6-க்குப் பிறகு நீண்டகாலத்துக்கு ஏற்ற, உலக தர நிர்ணயத்தோடு இருக்கும் மாசு உமிழ்வுக்கான தரநிர்ணயக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையை அதிக வேலைவாய்ப்புள்ள துறையாக மாற்றவேண்டும். 2026-க்குள் உற்பத்தித்துறை ஜிடிபிக்கு முக்கியப் பங்காற்றுவதாக ஆட்டோமொபைல் துறையை மாற்றவேண்டும்.

பொதுப் போக்குவரத்துக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டு தனிநபர் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் குறைக்கப்படவேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் புதிய வாகனங்களை வாங்கும்போது குறிப்பிட்ட சதவீதம் பசுமை வாகனங்களை கட்டாயம் வாங்கவேண்டும். மத்திய, மாநில அரசு துறைகள் 2023லிருந்து புதிய வாகனங்களை வாங்கும்போது 25 சதவீதம் பசுமை வாகனங்களாகவும், 2030லிருந்து புதிய வாகனங்களை வாங்கும்போது 75 சதவீதம் பசுமை வாகனங்களாகவும் வாங்க வேண்டும். நகராட்சி அமைப்புகளை பொறுத்தவரை புதிய வாகனங்களை வாங்கும்போது 2023லிருந்து 50 சதவீதம் பசுமை வாகனங்களாகவும், 2030லிருந்து 100 சதவீதம் பசுமை வாகனங்களாகவும் வாங்கவேண்டும். இதற்காக அரசின் இ-மார்க்கெட்டைப் (GeM) பயன்படுத்தலாம் போன்ற தகவல்களும் இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x