Published : 22 Feb 2018 08:36 AM
Last Updated : 22 Feb 2018 08:36 AM

உறுதியளிப்புக் கடிதங்களை 2008-லிருந்து வழங்கினேன்: சிபிஐ-யிடம் கோகுல்நாத் ஷெட்டி வாக்குமூலம்

2008-ம் ஆண்டிலிருந்தே உறுதி அளிப்பு கடிதங்களை (எல்ஓயு) வழங்கி வந்துள்ளதாக சிபிஐ-க்கு அளித்த வாக்குமூலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற இணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,300 கோடி நிதி முறைகேடு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கடந்த திங்களன்று கைது செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் வெளிநாட்டுப் பண பரிவர்த்தனை துறையின் பொறுப்பு தலைமை மேலாளர் திவாரி, வெளிநாட்டுப் பண பரிவர்த்தனை துறையின் மேலாளர் யஷ்வந்த் ஜோஷி , ஏற்றுமதித் துறையின் மேலாளர் பிரஃபுல் சாவந்த் ஆகியோரை மார்ச் 3-ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்கப்பட உள்ளனர் . இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் மோசடி நிகழ்ந்ததாகக் கூறப்படும் மும்பையின் பிராடி ஹவுஸ் கிளையின் வெளிநாட்டுப் பண பரிவர்த்தனைத் துறையோடு தொடர்புடையவர்களாவர்.

இணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டியும் ஒற்றைச் சாளர இயக்குநர் மனோஜ் காரத்தும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை துறையில் வேலை செய்தபொழுது 2017ம் ஆண்டின் பிப்ரவரி 9,10,14 தேதிகளில் ரூ.280 கோடி மதிப்புள்ள எட்டு உறுதியளிப்புக் கடிதங்களை நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலகாபாத் வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியின் ஹாங்காங் கிளைக்கு வழங்கியதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் தொகை பெரும்பாலும் இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத் இருவரும் மார்ச் 3ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று சிபிஐ தரப்பில் வாதாடிய சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஏ லிமோசின், தலைமை மேலாளர் என்ற முறையில் கோகுல்நாத் ஷெட்டியின் நடவடிக்கைகளை திவாரி கண்காணித்திருக்க முடியும். ஆனால் 2015-2017 கால அளவில் போலியான உறுதியளிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டதை திவாரி கண்டுகொள்ளவில்லை என லிமோசின் குற்றஞ்சாட்டினார். பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ரூ.280 கோடியை விட அதிகமாக ரூ.6000 கோடி அளவுக்கு போலி உறுதியளிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

திவாரி, யஷ்வந்த் ஜோஷி மற்றும் பிரஃபுல் சாவந்த் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் முழுப் பழியையும் கோகுல்நாத் ஷெட்டி மீது சுமத்துவதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூவரையும் மார்ச் 3-ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x