Published : 18 Feb 2018 02:28 AM
Last Updated : 18 Feb 2018 02:28 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி பணமோசடி விவகாரம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1360 கோடி பாதிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி நீரவ் மோடிக்கு அளித்த உறுதியளிப்புக் கடிதத்தால் 1,360 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தலை மறைவான நீரவ் மோடி யால் தங்களுக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் இல்லை என்று அந்த வங்கியின் தலை வர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த உறுதியளிப்புக் கடிதத்தால் நாங்கள் நீரவ் மோடிக்கு 1,360 கோடி ரூபாய் அளித்தோம். நீரவ் மோடியால் எங்களுக்கு நேரடியான பாதிப்புகள் இல்லை. ஆனால் கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெஹுல் சோக்ஸியால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அது சிறிய தொகை என்பதால் அது குறித்து எங்களுக்கு கவலையில்லை.

நாங்கள் மொத்தமாக ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு கடன் அளித்திருக்கிறோம். இதில் நகை மற்றும் ஜெம் துறைக்கு ரூ.13,000 கோடி அளவுக்கு மட்டுமே கடன் வழங்கி இருக்கிறோம். எங்களுடைய மொத்த கடன் தொகை யில் இது ஒரு சதவீதம் மட்டுமே.

அணிகலன்கள் மற்றும் ரத்தினத் துறைக் கணக்குகளை நாங்கள் மிக கவனமாக கவனித்து வருகிறோம். எங்களிடம் உறுதியான ரிஸ்க் மேலாண்மை அமைப்பு உள்ளது. ரிஸ்க் மேலாண்மையின் ஒரு பகுதியாக நாங்கள் பணி சுழற்சியை வைத்திருக்கிறோம். இதன்படி எங்களது ஊழியர்கள் ஒரே பணியில் மூன்றாண்டுகளுக்கு மேல் தொடர்வதில்லை. மிக முக்கியமான பொறுப்புடையவர்களின் பணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

எங்களது ஸ்விஃப்ட் முறையை கோர் பேங் கிங் முறையோடு ஒன்றிணைத்துள்ளோம். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்களை எளிதில் கண்டறிந்துவிடுவோம்.

வங்கிகள் இந்த அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அபாய மேலாண்மையை சீராய்வு செய்து அபாயத் தடுப்பில் ஏற்படும் ஓட்டைகளை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

இந்த இழப்புத்தொகையை ஈடுகட்டுவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியை நம்பி அளித்த கடனை வேறு வங்கிக்கு ஆக்ஸிஸ் வங்கி விற்றிருக்கலாம். நாங்களோ அல்லது வேறு யாராவதோ அதை வாங்கியிருக்கலாம். ஆனால் முக்கிய பாதிப்பு என்பது உறுதியளிப்புக் கடிதத்தை அளித்த வங்கிக்குத்தான் என்று ரஜ்னீஷ் குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x