Published : 20 Feb 2018 08:57 AM
Last Updated : 20 Feb 2018 08:57 AM

ஆன்லைன் ராஜா 15: காகித ஓடம் கடல் அலை மேலே..

ழக்கம்போல், மூழ்காத ஷிப் ஃப்ரண்ட்ஷிப் தான் என்பதை ஜாக் மா நண்பர்கள் நிரூபித்தார்கள்.

ஹே ஜியாங்யாங் என்னும் முன்னாள் மாணவர் இன்டர்நெட்டில் நம்பிக்கை இல்லாதவர். ஆசிரியர் கேட்கிறார் என்னும் ஒரே காரணத்துக்காகத் தான் வேலை பார்த்த சட்ட நிறுவனத்தின் விவரங்கள் தந்தார். வெளியான சில மணி நேரங்களில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து டெலிபோன் அழைப்புகள். தன் நட்பு வட்டங்களில் அவரால் பதில் சொல்லி மாளவில்லை.

இன்னொரு முன்னாள் மாணவி, ஷோ லான் லேக் வியூ ஹோட்டலில் வரவேற்பாளராக வேலை பார்த்தார். ஆசிரியருக்காகத் தன் முதலாளியிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆர்டர் வாங்கித் தந்தார். முதலாளி இந்தச் செலவைக் காந்திக் கணக்கில் எழுதிவிட்டார். மறந்தே போனார்.

சில மாதங்களுக்குப் பின். ஐ. நா. சபை சீனாவின் பீஜிங் நகரத்தில் நான்காவது அகில உலகப் பெண்கள் மாநாடு (Fourth World Conference on Women) நடத்தினார்கள். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹிலாரி போன்ற பிரபலங்கள் பங்கேற்றார்கள். பல நாடுகளிலிருந்து 17,000 பிரதிநிதிகள். பல நாட்களுக்கு உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தி இந்த மாநாடுதான். கூட்டம் முடிந்தபின், ஏராளமான வெளிநாட்டுப் பெண்கள் சுற்றுலாப் பயணிகளாக ஹாங்ஸெள வந்தார்கள். இவர்கள் அனைவரும் தங்கியது லேக் வியூ ஹோட்டலில். முதலாளிக்கு எக்கச்சக்க சந்தோஷம்.

அவர்களிடம் கேட்டார்,``எங்கள் ஹோட்டலை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?”

ஒருமித்த பதில்,``நாங்கள் சாதாரணமாக இணையத்தில் தேடித்தான் எங்கே தங்குவது என்று முடிவெடுப்போம். சீனாவில் லேக் வியூ ஹோட்டல் பற்றி மட்டுமே இணையத்தில் விவரங்கள் இருக்கின்றன.”

முதலாளி அதிர்ந்து போனார். ஷோ லான் பக்கம் போனார். சுளுக்கு வரும்வரை அவர் கையைக் குலுக்கித் தீர்த்துவிட்டார். அடுத்த சில மாதங்கள். லேக் வியூ ஹோட்டலில் நோ வேகன்சி.

இப்படிச் சிறு சிறு வெற்றிகள். இவற்றோடு வந்தது ஒரு அங்கீகாரம். சீனாவில் ஆண்டுதோறும் படகுப் பந்தயம் நடக்கும், ஒவ்வொரு வருடமும் இந்த வாய்ப்பு வேறு வேறு நகரங்களுக்குத் தரப்படும். 1995 – இல் ஹாங்ஸெள நகரம் தேர்வு பெற்றது. இதற்கான இணையப் பக்கங்களை வடிவமைக்கும் பணி ஜாக் மா கம்பெனிக்கு, கச்சிதமாகச் செய்துகொடுத்தார். சீனா முழுக்க யார் இந்த ZHITC என்று கேள்விகள். விழுந்தது புகழ் வெளிச்சம்.

ஹாங்ஸெள நகரம் இருந்த ஷெஜியாங் மாகாண அரசு இன்டர்நெட் சேவை தொடங்கியது. தங்கள் இணையப் பக்கங்களை வடிவமைக்கும் புராஜெக்ட்டுக்கு ``தங்கப் புறா திட்டம் “(Golden Dove Project) என்று பெயர் வைத்தார்கள். சீனத் தொலைத் தொடர்புத் துறையின் கீழ் ஹாங்ஸெள டிஃபே கம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவனம் இருந்தது. தங்கப் புறா இவர்கள் பொறுப்பு. ஆனால், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள்.

ஷெஜியாங் மாநில அரசில் யாங் ஜியான்க்சின் என்னும் உயர் அதிகாரி இருந்தார். படகுப் பந்தயத்துக்கு ஜாக் மா வடிவமைத்த இணையப்பக்கத்தினை பார்த்தார். இந்தத் திறமைசாலியைத் தானும் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஜாக் மா போனார்.

“சீனாவின் இன்டர்நெட் மேதை என்று ஜாக் மா பற்றிப் பலர் சொல்லியிருந்தார்கள். தலை நரைத்த, வயதான மனிதரை எதிர்பார்த்தேன். ஒரு இளைஞர் வந்ததும், எனக்குள் ஆச்சரியம், நம்பிக்கையில்லாத்தனம். அவர் பேசப் பேச, அவர் மேல் மதிப்பு வந்தது. அவரும், என்னை வாய் திறக்கவே விடாமல், இரண்டு மணி நேரம் பேசினார்.”

ஜியான்க்சின் கவிழ்ந்தார். ஆர்டர் தரச் சம்மதித்தார். ஒரு பிரச்சினை. இது தேங்காய்மூடிக் கச்சேரி. இந்த புராஜெக்ட்டுக்கு பணம் தர அரசிடம் பட்ஜெட் இல்லை. ஜாக் மா மின்னல் வேக மனக் கணக்குப் போட்டார். இந்த இணையதளப் பக்கங்களை வடிவமைத்துக் கொடுத்தால் சீனா முழுக்க, ஏன், உலகின் பிற நாடுகளிலும் அவர் பற்றிப் பிறர் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு.

ஆகவே, இதில் செலவிடும் பணமும், நேரமும், முயற்சிகளும் உண்மையில் செலவல்ல, முதலீடு. ஓசியில் புராஜெக்ட் செய்யச் சம்மதித்தார். படைப்பில் முழுத் திறமையையும் காட்டினார்.

இணையப் பக்கம் திறந்த ஓரிரு நாட்கள். அதன் தொழில் நேர்த்தி, ஈர்ப்பு பற்றி ஜியான்க்சினுக்கு வெளிநாடுகளிலிருந்து பல வாழ்த்துச் சேதிகள். அனுப்பியோரில் முக்கியமான இருவர் – அமெரிக்க மக்கள் மன்ற உறுப்பினர் ஜான் ஹோஸ்ட்லெர், செனட் உறுப்பினர் பில் பிராட்லி. இன்டர்நெட் தாயகமான அமெரிக்காவே வாழ்த்துகிறதென்றால் சும்மாவா? ஜியான்க்சின் பிரமித்தார். “எல்லாப் புகழும் உங்களுக்கே ” என்று ஜாக் மாவுக்கு மனமார நன்றி சொன்னார். இந்தப் பெருந்தன்மை ஹாங்ஸெள டிஃபே கம்யூனிக்கேஷன்ஸ் அதிகாரிகளுக்கு இருக்கவில்லை.

புராஜெக்ட்டில் துரும்பைக் கூடத் தூக்கிப் போடாவிட்டாலும், தாங்கள் முக்கிய பங்காற்றியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். ஜாக் மாவுக்கு இது பிடிக்கவில்லை. ஆனாலும், பொறுமையோடு மெளனம் காத்தார்.

இப்படி அங்கீகாரங்கள் வந்தபோதிலும், பிசினஸ் சூடு பிடிக்கவில்லை. இதற்கு மூன்று காரணங்கள்;

முதல் காரணம் – ஹாங்ஸெள நகரத்தில் இன்டர்நெட் சேவையே இருக்கவில்லை. 4,000 யான் பணம் தருபவர்களால் தங்கள் இணையப் பக்கங்களையே பார்க்கமுடியாது. ஏன், ஜாக் மாவே பார்க்கமுடியவில்லை. அவர் நிஜமாகவே இணையத்தில் விவரங்களை வெளியிட்டாரா அல்லது பணத்தை வாங்கிக்கொண்டு டபாய்த்துவிட்டாரா என்று சந்தேகப்பட்டார்கள். பிரச்சினைகளுக்கு வித்தியாசத் தீர்வு காண்பதில் மன்னர் என்று காட்டினார். ஸ்டூவர்ட் டிர்ஸ்ட்டியிடம், இணையப் பக்கங்களின் கலர் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பச் செய்தார். இவற்றின் பிரதிகளை விளம்பரதாரர்களுக்கு விநியோகித்தார். வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கை வளரத் தொடங்கியது. ஆர்டர்கள் வரத் தொடங்கின.

இரண்டாம் காரணம் – ஜாக் மா போட்ட பாதையில், இன்டர்நெட் டெக்னாலஜீஸ் சீனா, சைனீஸ் ஸ்டார் என்னும் இரண்டு பணபலம் கொண்ட கம்பெனிகள் இன்டர்நெட் பிசினஸ் தொடங்கினார்கள். மொத்த பிசினஸே குறைவு. அதையும் இப்போது மூன்று பேர் பங்குபோடவேண்டிய கட்டாயம். ஜாக் மா கொஞ்சம் கண் அயர்ந்தால் அவரை விழுங்கிவிடுவார்கள்.

மூன்றாம் காரணம் - இன்டர்நெட் தகவல் பரிமாற்றம் என்பது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றம், மக்களின் மனமாற்றம். இவை சீனா போன்ற பாரம்பரிய நாட்டில் மிக மெதுவாகத்தான் நடக்கும். இவை போதாதென்று, அரசுக் கொள்கைகளால் வந்த கட்டமைப்புத் தட்டுப்பாடுகள். நிர்வாக இயந்திரம் எப்போதுமே மெதுவாகத்தானே இயங்கும்? சீன அரசு தன் கொள்கை வரம்புக்குட்பட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

ஆனால், பிசின்ஸ்மேன்கள் எதிர்பார்த்ததைவிட மிக மெதுவாக. அரசுத் தொலைபேசித் துறை, ஹாங்ஸெள நகரம் இருந்த ஷெஜியாங் மாகாணத்தில் இன்டர்நெட் சேவை தொடங்கினார்கள். பல கோடி பேர் கொண்ட மாநிலத்தில் முதல் வருட வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் தெரியுமா? வெறும் 204 பேர்! ஜாக் மா உட்பட.

ஜாக் மா சொன்னார், ``இன்டர்நெட் பிசினஸ், மாரத்தான் என்னும் நெடுந்தொலைவு ஓட்டம். முயலின் வேகமும், ஆமையின் பொறுமையும் வேண்டும்.” அவர் வேகமாக இருந்து என்ன பயன்? வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆமை வேகத்தில் உயர்ந்துகொண்டிருந்தது. இது ஆபத்தின் அறிகுறி.

ஊழியர்கள் மனங்களில் கம்பெனியின் வருங்காலம் பற்றி அவநம்பிக்கை. தன் பிசினஸ் ஜெயிக்கவேண்டுமானால், ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் சிரித்த முகம் காட்டவேண்டும், இனிமையாகப் பேச வேண்டும். அவர்கள் பழகுதலில் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். இப்படி அர்ப்பணிப்போடும், உற்சாகத்தோடும் வேலை பார்க்க முக்கிய காரணி சம்பள உயர்வு. இதைத் தரும் நிலையில் ஜாக் மா இல்லை. ஒரு ஒரிஜினல் ஐடியா கண்டுபிடித்தார். மேனேஜ்மெண்ட் மேதைகள் கேட்டிருந்தால், ``கோமாளித்த னம்’ என்று கேலி செய்திருப்பார்கள். அந்த ஐடியா, “கனவு காண்போம்.”

கோமாளித்தனமோ, இல்லையோ, பலித்தது.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x