தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48,720

தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48,720
Updated on
1 min read

சென்னை: சென்னையில் தங்கம் விலை 3-வது நாளாக நேற்றும் அதிகரித்தது.பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.48,720 எனும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என விற்பனையானது.அதன்பிறகு, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்கம் விலை, கடந்த டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 ஆக உயர்ந்தது.

பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி பவுன் ரூ.48,120 மற்றும் 6-ம் தேதி ரூ.48,320 என அடுத்தடுத்து புதிய உச்சங்களை அடைந்தது. இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

நேற்று கிராமுக்கு ரூ.50 என பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.6,090-க்கும்,ஒரு பவுன் ரூ.48,720-க்கும் விற்பனையானது.24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.52,480-க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் ரூ.78.50-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 அதிகரித்து, ரூ.78,500-க்கும் விற்பனையானது.தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை கவலையடைய செய்துள்ளது.இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே தங்கம் விலை உயர்வுக்கு காரணம். குறிப்பாக, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதிக்கான குறியீடுகள் சாதகமான நிலையில் இல்லை. இதனால் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக அதன் கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்ததால் விலையும் உயர்ந்துள்ளது. 2 வார காலத்துக்கு விலை உயர்வு காணப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை எட்டக்கூடும். இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in