Last Updated : 06 Feb, 2018 06:24 PM

 

Published : 06 Feb 2018 06:24 PM
Last Updated : 06 Feb 2018 06:24 PM

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.2.50 லட்சம் கோடி இழப்பு : வீழ்ச்சியின் கிடுக்கிப்பிடியில் பங்குசந்தை

 

சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பு, முதலீட்டாளர்களுக்கு புதிய வரி உள்ளிட்ட அச்சத்தின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் நேற்றும் கடும் சரிவு காணப்பட்டது. இதனால், தொடர்ந்து 6-வது நாளாக வீழ்ச்சியின்  பிடியில் பங்குச்சந்தை சிக்கித் தவிக்கிறது.

முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

பங்குகளில் நீண்டகால முதலீடு செய்பவர்களுக்கு வரிவிதிப்பு கொண்டுவரப்படும் 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்குபின் சரிந்த பங்குச்சந்தை கடந்த 6 நாட்களாக மீளவில்லை.

, அமெரிக்க பங்குச்சந்தையின் நிலையற்றதன்மையைப் பார்த்து ஆசியப் பங்குச்சந்தைகள், ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகளும் வீழ்ச்சி அடைந்தன. மேலும் ஹாங்காங், சிட்னி, சிங்கப்பூர், சியோல், தைப்பே, ஷாங்காய் ஆகிய பங்குச்சந்தைகளும் சரிவில் இருந்து தப்பவில்லை. இதன் தாக்கம் காலையில் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

மேலும், ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்பு வெளியிடுவதால், உள்நாட்டு முதலீடாளர்களும் அச்சமடைந்து பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்தனர்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பில், வட்டிவீதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்ற செய்தியும் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், காலையில் இருந்து பங்குகளை வேகமாக விற்கத் தொடங்கியதால், சந்தையின் தொடக்கத்திலேயே 1200 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தது.

நண்பகலுக்கு பின் ஓரளவு மீண்ட பங்குச்சந்தை மாலையில் மீண்டும் சரிவைச் சந்தித்தது. இதனால் வர்த்தகம் முடிவில் மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 561.22 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 34,195.94 புள்ளிகளில் முடிந்தது.

50 நிறுவனப் பங்குகளைக் கொண்டிருக்கும் தேசியப் பங்கு சந்தையான நிப்டியில் 168.30 புள்ளிகள் சரிந்து, 10,498.25 புள்ளிகளில் நிலைபெற்றது. ஒட்டுமொத்தமாக பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு இன்று ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த 6 நாட்களில் மட்டும் பங்குசந்தை 1,769 புள்ளிகளை இழந்துள்ளது.

ரிலையன்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி சுஸூகி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், எச்டிஎப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, விப்ரோ, பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x