Published : 26 Dec 2017 09:52 am

Updated : 13 Feb 2018 11:40 am

 

Published : 26 Dec 2017 09:52 AM
Last Updated : 13 Feb 2018 11:40 AM

ஆன்லைன் ராஜா 07: காதலுக்குப் பச்சைக் கொடி!

07

கெ


ன் மார்லியிடமிருந்து கடிதம். ஆஸ்திரேலியாவுக்கு வந்து தங்கள் குடும்பத்தோடு ஒரு மாதம் தங்குமாறு அழைப்பு. டிக்கெட் உட்பட அத்தனை செலவுகளும் அவரது ஏற்பாடு. அன்றைய சீனாவில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் பிரயாணம் செய்தார்கள். அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் சாமானியர்களுக்குக் கனவுப் பிரதேசங்கள். ஜாக் மா வெளியே போகும்போது வேற்றுக் கிரகவாசியாகப் பார்த்தார்கள். ``இந்தச் சின்னப் பையனுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தாயா? ஆஸ்திரேலியா போகிறானாம். அதுவும், முழுச் செலவையும் யாரோ தருகிறார்களாம்.”

ஜாக் மா ஆஸ்திரேலியா புறப்பட்டான். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை ஆகியோருக்கு அவனைப் பிரியும் சோகம். அதேசமயம், அவனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நினைத்து அளவில்லாப் பெருமை.

கென் மார்லி குடும்பத்தோடு விமான நிலையத்துக்கு வந்திருந்தார். டேவிட் ஓடிவந்து அவனைக் கட்டித் தழுவிக்கொண்டான். அவர்கள் வீட்டில் டேவிட் அறையில் தங்கினான். சீனாவில் அண்ணன், தங்கையோடு ஒரே அறையில் தூங்கிப் பழகியவனுக்கு, டேவிட், ஸ்டீபன், சூஸன் ஆகிய மூவருக்கும் தனித்தனி அறை என்பதை நம்பவே முடியவில்லை. வீட்டில் இருந்த வசதிகள்……இதுவரை அவனுக்குத் தெரியவே தெரியாதவை.

கென் மார்லி நண்பர்கள் வீடுகளுக்கும், பார்ட்டிகளுக்கும் ஜாக் மாவைக் கூட்டிக்கொண்டு போனார். தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் பழகும் அவனை எல்லோருக்கும் பிடித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்குச் சீனா பற்றித் தெரியவே தெரியாது. ஆகவே, அவனைச் சுற்றி எப்போதும் கூட்டம்.

ஒருநாள் உள்ளூர் அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. பாட்டு, நடனம், விகடம் என்று பலர் தங்கள் திறமைகளை மேடையேற்றிக் கொண்டிருந்தார்கள்.

“ஜாக் மா, சீனாவின் கலை ஐட்டம் ஏதாவது செய்கிறாயா?” என்று கென் மார்லி கேட்டார்.

இதற்குத்தான் காத்திருந்ததுபோல் ஜாக் மா பாய்ந்து வந்தான். அவனுக்கு நடிக்கப் பிடிக்கும். சிறுவனாக இருக்கும்போது பார்த்திருந்த பிங்டான் (Pingtan) என்னும் கலை நிகழ்ச்சிகள், ஆப்பரா (Opera) என்னும் சீனப் பாரம்பரிய நாடகங்கள் இப்போது துணைவந்தன. சீனாவில், குடிகாரக் குரங்கு (Drunken Monkey*) என்னும் ஒருவகைக் குங்ஃபூ சண்டை உண்டு. மது அருந்திய குரங்கு குங்ஃபூ சண்டை செய்வதுபோல் ஃபைட் பண்ணவேண்டும், ஜாக் மா நடித்தான், அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. கென் மார்லி குடும்பம் பெருமைப்பட்டார்கள்.

(*ஜாக்கி சான், தன் Drunken Master, Drunken Master II, Drunken Master III என்னும் படங்களில், இந்த ஃபைட்டில் அதகளம் பண்ணுவார். சாம்பிள் பார்க்கவேண்டுமா? இந்த இணைப்பில் சொடுக்கவும். https://www.youtube.com/watch?v=KFFedZY2G_c)

ஒரு மாதம் ஓடிப்போனது. ஜாக் மாவிடம் அவன் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இதுவரை, இத்தனை அன்பு காட்டியதில்லை. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே போதாமல் ஊர் திரும்பினான்.

கல்லூரி இரண்டாம் வருடம் தொடங்கியது. ஜாக் மா மாணவர் யூனியன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். சாதாரணமாக அன்றைய சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கொண்டவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு வரமுடியும். அரசியல் சாயலே இல்லாத ஜாக் மாவுக்கு யானை மாலை போட்டது, மாணவர்கள் அவனிடம் வைத்திருந்த நன்மதிப்பால். இந்தத் தனி மரியாதைக்குப் பல காரணங்கள்.

ஆரம்பப் பள்ளியிலும், நடுநிலைப் பள்ளியிலும் பல வகுப்புகளில் தோற்று அநேக வகுப்புகளை மறுபடியும் படித்த பல வருடங்கள். கல்லூரி நுழைவுத் தேர்வில் மூன்று அட்டெம்ப்ட்கள். ஆகவே, அவனுக்கு வயது 21. சக மாணவர்களின் வயதோ 17. இந்தியாவைப் போலவே சீனாவும் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை தரும் சமுதாயம்.

வெகு சிலருக்கே சாத்தியமான வெளிநாட்டுப் பயணம் போய்விட்டு வந்தவன். இதனால், தலையில் ஒரு ஒளிவட்டம்.

படிப்பில் முன்னணி மாணவன்.

எல்லோரிடமும் நட்போடு பழகுபவன். தலைவன் என்னும் பந்தாவோடு இருக்கமாட்டான். யாரும் அவனைச் சுலபமாக அணுகலாம்.

பேச்சுத்திறமை கொண்டவன். அதுவும், ஆங்கிலத்தில்.

நேர்மையானவன்.

வாழ்க்கையில் சந்தோஷம் தொடர்கதை. அடுத்த அத்தியாயம், கென் மார்லியிடமிருந்து கடிதம். அவனைப் பார்க்க ஹாங்ஸெள வருகிறார். அவருடன் மகன் ஸ்டீஃபன். ஜாக் மாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அதே நேரம், நண்பன் டேவிட் வரவில்லையே என்று கொஞ்சம் வருத்தம்.

ஜாக் மாவுக்குச் சுயமரியாதை அதிகம். கென் மார்லி குடும்பம் அவனிடம் கொட்டிய அன்புக்குச் சமமாக விருந்தோம்பல் செய்து அவர்களை அசத்திவிடவேண்டும். ஒரே ஒரு பிரச்சனை, அவனிடம் டப்பு லேது. வெறுங்கையால் முழம் போட ஜாக் மாவிடம் மாத்தி யோசிக்கும் திறமை இருந்தது.

கென் மார்லிக்குக் கடிதம் எழுதினான், ``தங்கும் ஹோட்டல், ஊர் சுற்றிப் பார்ப்பது ஆகிய எதற்கும் ஏற்பாடு செய்யாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.”

ஜாக் மா வீடு மிகச் சிறியது. கென் மார்லியும், ஸ்டீஃபனும் அங்கே தங்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு மாணவர் ஹாஸ்டலில் அறைகள் போட்டான். சாப்பாடு ஜாக் மா வீட்டில். சமையலில் அவன் அம்மாவுக்கு உதவி செய்வதைக் கென் மார்லி பார்த்தார். இந்தச் சகலகலா வல்லவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லையோ என்று பிரமித்தார். ஊர் முழுக்க விருந்தினரோடு சைக்கிளில் சுற்றினான். ஒரு நாள். தான் காத்தியைக் காதலிக்கும் ரகசியத்தைக் கென் மார்லியிடம் பகிர்ந்துகொண்டான். அவன் காதல் வெற்றி பெற மனமார வாழ்த்தினார்.

ஜாக் மாவுக்கு ஒரு ஐடியா. விருந்தாளிகளைச் சில கிராமங்களுக்குக் கூட்டிக்கொண்டு போய், சீனாவின் நாட்டுப்புறக் கலைகளைக் காட்டவேண்டும். அவனிடம் இருந்ததோ சைக்கிள் மட்டும்தான். கார் கிடையாது. காரை வாடகைக்கு எடுக்கும் வசதியும் இல்லை. முடியாதது என எதுவும் ஜாக் மாவுக்குக் கிடையாதே? நம் ஊரில் சரக்குகளை எடுத்துப்போக டெம்போ (Tempo) என்னும் வண்டி பயன்படுத்துவோம், தன் நண்பனிடம் சொல்லி, இந்த சரக்கு வண்டியை ஓசிக்கு வாங்கினான். அதன் பின்புறம் திறந்தபடி இருக்கும். அதில் இரண்டு நாற்காலிகளைப் போட்டான். கயிற்றால் டிரக்கின் பக்கவாட்டில் இறுகக் கட்டினான். கென் மார்லியையும், ஸ்டீஃபனையும் அங்கே உட்காரச் சொன்னான். ஓட்டுநரோடு ஜாக் மா முன் பக்கம் உட்கார்ந்துகொண்டான். கென் மார்லிக்கும், ஸ்டீஃபனுக்கும் இது மறக்கவே முடியாத அனுபவம். டிரைவர் பிரேக் போடும்போதெல்லாம் நாற்காலிகள் ``சர்” என்று ஓடின. அவர்கள் லப் டப் எகிறியது, பயத்தையும் மீறி ரசித்தார்கள், கிராமியக் கலைகளைப் பார்த்து ரசித்தார்கள். சீனாவின் பாரம்பரியப் பெருமையை உணர்ந்தார்கள்.

ஹாங்ஸெள திரும்பிய பின் ஒரு இரவு. ஜாக் மா ஒரு உணவு விடுதியில் கென் மார்லிக்கும் ஸ்டீஃபனுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். சில சிறப்பு விருந்தினர்கள். ஜாக் மா அழைப்பை ஏற்று வந்திருந்தவர்கள் யாரார் தெரியுமா? ஹாங்ஸெள நகர மேயர், பல அரசு அதிகாரிகள், நகரின் பிரபலங்கள். சாப்பிடும்போது கீழே பார்த்தால்……நகரின் முக்கிய திருவிழா ஒன்று நடந்துகொண்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சி. ஸ்டீஃபன் சொன்னான். ``இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை நான் அதுவரை பார்த்ததே கிடையாது. எங்களுக்கு நடத்திய விருந்தில் மேயரே கலந்துகொண்டாரென்றால்….. ஜாக் மாவுக்கு இத்தனை நட்பு வட்டமா என்று நானும் அப்பாவும் பிரமித்துப் போனோம்.”

கென் மார்லி புறப்படுவதற்கு முந்தைய நாள். ஜாக் மா வீட்டில் அவன் குடும்பத்தோடு உட்கார்ந்து அவரும் ஸ்டீஃபனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்டீஃபன் ஜாக் மாவைச் சுட்டிக்காட்டி,``நா பெங் யோ” என்று ஏதோ சொன்னான். சீன மொழியில் ``காதலி” என்று அர்த்தம். பேசி முடித்ததும், ``வீட்டுக்குத் தெரியாமல் ஜாக் மா மறைத்துவைத்திருந்த ரகசியத்தை நான் உளறிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். அவனும், அவன் பெற்றோரும் நாங்கள் இருப்பதையே மறந்து சீன மொழியில் நீண்ட நேரம் காரசாரமாகப் பேசிக்கொண்டார்கள்.”

அறைக்கு வந்ததும்,கென் மார்லி ஸ்டீஃபனைக் கடிந்துகொண்டார். அவனுக்குத் தூக்கமே வரவில்லை. காலையில் ஜாக் மா வந்தவுடன் அவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

காலையில் ஜாக் மா சிரித்துக்கொண்டே வந்தான். பெற்றோர் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். அவர்கள் போட்ட ஒரே நிபந்தனை – கல்யாணம் படிப்பை முடித்த பிறகுதான். ஸ்டீஃபனுக்கு மனமார நன்றி சொன்னான். வீட்டில் அவன் பேச பயந்துகொண்டிருந்த காதல் சமாசாரத்தைப் போட்டு உடைத்தவன் ஸ்டீஃபன்தானே?

(குகை இன்னும் திறக்கும்)

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x