Published : 01 Mar 2024 07:04 AM
Last Updated : 01 Mar 2024 07:04 AM

சக்கர நாற்காலி கொடுக்காததால் பயணி உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு

மும்பை: ஏர் இந்தியா விமான பயணிக்கு சக்கர நாற்காலி கொடுக்காமல் அவர் நடந்தே சென்று உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்தநிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதி நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு வயதான தம்பதி பயணம் செய்துள்ளனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்து டெர்மினலுக்கு நடந்தே வந்த 80 வயதான அந்தப் பயணி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பிப். 16-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

ஏர் இந்தியா பதிலில், “பயணியின் மனைவிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மற்றொரு நாற்காலியை ஏற்பாடு செய்யும் வரை காத்திருக்குமாறு பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்குள் அவர் தனது மனைவியுடன் டெர்மினலுக்கு நடந்தே சென்றுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலில் திருப்தியடையாத டிஜிசிஏ, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளை ஏர் இந்தியா கடைப்பிடிக்கவில்லை . இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம்தான் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

விமானத்தில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x