Published : 14 Feb 2018 08:40 AM
Last Updated : 14 Feb 2018 08:40 AM

மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த அரசு பரிசீலனை: நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தகவல்

மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். கிராமப்புற பகுதிகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க இந்த நடவடிக்கை உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேக்ஸ் பூபா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கோ ஆக்டிவ் என்ற காப்பீட்டுத் திட்ட அறிமுக விழாவில் அமிதாப் காந்த் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவிற்கு மிகச் சிறப்பான ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படுகின்றன. எனவே 1.5 லட்சம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இந்திய மருத்துவக் கவுன்சிலில் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இதனால் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். நாட்டின் எல்லா கிராமப்புற பகுதிகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. முதலாவதாக ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இரண்டாவதாக 50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம். இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள இந்தத் திட்டம் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேரை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவரும்.

மருத்துவ சேவைக்கான கட்டணங்கள் உயர்ந்துவரும் நிலை யில் கோ ஆக்டிவ் போன்ற திட்டங்கள் இந்தியாவுக்கு கட்டாய தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். கோ ஆக்டிவ் காப்பீட்டுத் திட்டத்தை தினசரி மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என மேக்ஸ் பூபா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்துக்காக மேக்ஸ் பூபா நிறுவனம் கோக்யூஐஐ, பிராக்டோ,1 எம்ஜி போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் 60 சதவீத மருத்துவ சேவைகளுக்கான செலவு மிக அதிகமாக இருக்கும் நிலையில் செலவைக் குறைப்பதும், அதிக மக்களை காப்பீட்டு எல்லைக்குள் கொண்டுவருவதும்தான் தங்களது நோக்கம் என மேக்ஸ் பூபா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் மெஹ்ரோத்ரா தெரிவித்தார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x