இரு தரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்க இந்தியா - கிரீஸ் முடிவு: பிரதமர் மோடி
புதுடெல்லி: இந்தியா - கிரீஸ் இடையேயான வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன், அந்நாட்டு தூதுக்குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, "கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசையும் அவரது தூதுக்குழுவையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நான் கிரீஸ் சென்றேன். அதனைத் தொடர்ந்து கிரீஸ் பிரதமர் இந்தியா வந்திருப்பது, இரு நாட்டு உறவின் வலிமைக்கு அடையாளம். 16 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் பிரதமர் இந்தியா வந்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.
கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடனான பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இருநாட்டு வர்த்தகத்தை வரும் 2030க்குள் இரட்டிப்பாக்கத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்காக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்த இரு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இரு நாட்டு ஒத்துழைப்புக்கு புதிய ஊக்கத்தையும் வழியையும் வழங்குவதற்கான பல்வேறு வாய்ப்புகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். வேளாண்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள்,தொழில்நுட்பம், புதுமை, திறன் மேம்பாடு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். இரு நாடுகளின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இடையே இணைப்பை உருவாக்குவது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஏற்றுமதி மற்றும் இணைப்பு ஆகியவை இரு நாடுகளின் முன்னுரிமையாக உள்ளது. எனவே, இவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் விவாதித்தோம்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு அதிகரித்திருப்பது இரு நாடுகளின் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, கடல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்காக செயல் குழுவை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தோம். இரு நாடுகளின் பாதுகாப்பு துறை இடையே இணைப்பை உருவாக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்த கருத்து உள்ளது. இதில், ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
