10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறலாம்: இணையவழியில் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறலாம்: இணையவழியில் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கடந்த 1865-ம் ஆண்டுமுதல் பதிவுத்துறையில் பதிவான 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் வழியாகபெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ.25.15 கோடியில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலக கட்டிடங்கள், ரூ.3.62 லட்சம் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகியஇடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து, எந்த ஆவணத்துக்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற வசதிசெய்யப்பட்டுள்ளது. ஒளிவருடல்செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக,மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் ரூ.31.49 கோடியில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 1865-ம் ஆண்டு முதல் மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் ‘https://tnreginet.gov.in’ என்ற இணைய முகவரி வழியாக பெறும் சேவையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தால் பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒருசான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.

பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள 3 இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகளுடன் ரூ.6.75 கோடி செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள 2 இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகளின் (IP Camera) பயன்பாட்டையும் முதல்வர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, துறை செயலர் பா.ஜோதிநிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் டி.ஜகந்நாதன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in