

கோவை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத் தித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்துள்ள தமிழக அரசின் நவடிக்கையால் எதிர்வரும் காலங்களில் இத்துறையில் தமிழகம் சிறந்த வளர்ச்சியை பெறும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) உற்பத்தி, பகிர்மானம் என இரண்டு நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கென ‘டிஎன்ஜிசிசிஎல்’ என்ற நிறுவனம் ‘டான்ஜெட்கோ’ கட்டமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தமிழ்நாடு ஆற்றல் மேம்பாடு ஏஜென்சி ‘டிஇடிஏ’-வுடன் இணைந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்கு தொழில்துறை யினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின்(டீகா) தலைவர் பிரதீப் கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. பசுமை ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
காற்றாலை, சூரியஒளி, நீர் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தனி கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை சாளர முறை அமல் படுத்தப்படுவது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முதலீட்டா ளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இதனால் முதலீடுகள் அதிகரிக்கும். தமிழக அரசின் இந்நடவடிக்கையை தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கம் வரவேற்கிறது. எதிர்வரும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் தமிழகம் சிறந்து விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறைக்கு தமிழக அரசு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்கத்தக்கது. மின்சாரத்துறை மட்டுமின்றி இன்று பல்வேறு துறைகளிலும் பல பிரிவுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பலன்களை மக்களுக்கு நிறுவனங்கள் பகிர்ந்தளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசை போல், மத்திய அரசும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தேசிய அளவில் அமல்படுத்தப்படும் அத்தகைய திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி சிறப்பான முறையில் தமிழகத்தில் திட்டங்களை இணைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.