

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதம் சரிந்துள்ளது. அதற்கு முந்தைய ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 2.9 சதவீதம் சரிந்தது. தொடர்ச்சியாக, இரண்டு காலாண்டாக ஜப்பானின் ஜிடிபி சரிந்துள்ள நிலையில், அந்நாடு உலகின் பெரியபொருளாதார நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு பின்னகர்ந்துள்ளது.
ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து வருவதும், உற்பத்தியும் போட்டிச் சூழலும் குறைந்திருப்பதும் அதன் பொருளாதார சரிவுக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரும் அழிவுக்கு உள்ளான ஜப்பான், விரைவிலேயே அந்த அழிவிலிருந்து மீண்டதோடு மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது.
1970, 80-களில் மிகப் பெரும் வளர்ச்சியில் ஜப்பான் பயணித்தது. 1990-ல் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் துறை சரிவால் அதன் பொருளாதாரம் தடுமாற்றத்துக்கு உள்ளானது. எனினும் நிதான வேகத்தில் அதன் வளர்ச்சி இருந்தது. இந்நிலையில், 2010-ம் ஆண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா 2-வது இடத்துக்கு முன்னேறியது.
2023-ம் ஆண்டு நிலவரப்படி இப்பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், தற்போது ஜப்பான் 4-ம் இடத்துக்கு பின்னகர்ந்துள்ளது. ஜெர்மனி 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
ஜப்பானின் பொருளாதார சரிவு குறித்து டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் டெட்சுஜி ஒகாசாகி கூறுகையில், “முன்பு, உலகளவில் வாகனத் துறையில் ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது உலகம் மின்வாகனம் நோக்கி வேகமாக நகர்ந்து வருகிற நிலையில், ஜப்பான் அதன் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியுள்ளது.
ஜப்பானில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், தனிநபர் நுகர்வு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் ஜப்பானில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.