

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் எதிரொலியாக, மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுத் துறை வங்கிகள் தங்கள் கிளைகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த ஓர் அதிகாரியையும் பணி புரிய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. 2017 டிசம்பர் 31 உடன் 3 ஆண்டுகள் நிறைவு செய்த அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், 2017 டிசம்பர் 31 உடன் 5 ஆண்டுகள் நிவர்த்தி செய்த கிளார்க்குளையும் பணியிட மாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் இந்த உத்தரவை பாங்க் ஆஃப் பரோடா செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.
ரூ.11,500 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் ரூ.280 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, தொழிலதிபர் நிரவ் மோடி மீது 2 வழக்குகள் தொடர்ந்துள்ளது. நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
நிரவ் மோடி வங்கி மோசடியில் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், வங்கி அதிகாரிகளை 3 ஆண்டுகளில் பணியிட மாற்றம் செய்யுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.