Published : 25 Feb 2018 09:35 AM
Last Updated : 25 Feb 2018 09:35 AM

பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா

பழச்சாறு குளிர்பானங்கள் தயாரிப்பில் ஈடுபட கோகோ கோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசிய பிராந்தியத் தலைவர் டி. கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

மக்களின் நுகர்வு பழக்கம் மாறி வருகிறது. அதற்கேற்ப குளிர்பானங்களின் தேர்வும் மாறுகிறது. ஆரோக்கியமான பானங்களை அருந்தும் போக்கு பெருகி வருகிறது. அதற்கேற்ப பழச்சாறு பானங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சர்க்கரை குறைந்த அதேசமயம் அதிக சத்து கொண்ட பானங்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். பழச்சாறு ஜூஸ்கள் ஸ்பிரைட், லிம்கா பிராண்ட் பெயரில் அறிமுகமாக உள்ளன. தயாரிப்புகளின் சுவைக்கேற்ப இவற்றில் 7 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை இயற்கையான பழச்சாறுகள் சேர்க்கப்படுகிறது.

தம்ஸ் அப் பிராண்டை அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் ஆகியவற்றில் இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். முதல் கட்டமாக உறைய வைக்கப்பட்ட பழங்கள் நிறைந்த ஐஸ்கிரீம் போன்ற தயாரிப்பை மினிட் மெய்ட் ஃபர்பெக்ட் புரூட் என்ற பெயரில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஐஸ்கிரீமுக்கு மாற்றாக இது அமையும். இதை பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தயாரிப்பை வழங்கக்கூடிய உறை நிலை ஃபிரிட்ஜ் வசதி கொண்ட விற்பனையகங்கள் 30 முதல் 35 வரை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் காய்கறி ஜூஸ்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக கேரட் ஜூஸ்களை தயாரிக்க உள்ளதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x