

பெங்களூரு: குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.100 கோடியை சேமிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 1,400 பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 9,000 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அதில் சுமார் 15 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடியை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது.
நிதி பற்றாக்குறையின் காரணமாக ஸ்பைஸ்ஜெட் கணிசமான விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவிடும் விதமாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இருப்பினும், எவ்வளவு பணியாளர்களை நீக்கப் போகிறது என்பதை அந்த நிறுவனம் உறுதியாக தெரிவிக்கவில்லை. இவ்வாறு ஊடக வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக இருந்த ஸ்பெஸ்ஜெட் பங்கு விற்பனை மூலம் ரூ.2,250 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்தது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.744 கோடியை மட்டுமே இதுவரையில் ஸ்பைஸ்ஜெட் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.