இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை தொடங்கினார் மோடி

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை தொடங்கினார் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: மொரிஷியஸ், இலங்கை நாடுகளில் யுனிஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவையை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான தினம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவீண் ஜெக்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யுபிஐ சேவையை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாகும். யுபிஐ சேவை அறிமுகம் மூலம் எல்லை தாண்டிய நிதி பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, எல்லை தாண்டிய உறவும் வலுப்படும். நமது வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கிறோம். இது, நமது மக்களின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

மொரிஷியஸ் பிரதமர் ஜெக்நாத் கூறுகையில், “ யுபிஐ சேவை தொடக்கத்தின் மூலம் இந்தியா-மொரிஷியஸ் இடையிலான உறவு புதிய பரிமாணம் எடுத்துள்ளது. கலாச்சாரம், வணிகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருநாடுகளும் இடையே வலுவான உறவு உள்ளது. டிஜிட்டல் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த யுபிஐ சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே கூறும்போது, “இந்திய பிரதமர் மோடி யுபிஐ சேவையை இலங்கையில் தொடங்கி வைத்தது இவ்வாண்டில் இரண்டாவது முக்கிய நிகழ்வு. சில வாரங்களுக்கு முன்பு ராமர் கோயில் திறக்கப்பட்டது முதலாவது முக்கிய நிகழ்வு. இதில், கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எங்களுக்கு தொடர்பு உள்ளது.

இந்தியா-இலங்கை இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிதி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. எங்கள் அருங்காட்சியகங்களில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான தென்னிந்திய நாணயங்களே இதற்கு சான்று. எனவே, நமது நட்புறவை தற்போது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தியுள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in