விரிவாக்க திட்டம் தாமதம்: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கோவை விமான நிலையம்
கோவை: கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு காட்டும் அக்கறை கோவை விமான நிலையத்தின் மீது காட்டப்படுவதில்லை என பயணிகள், எம்.பி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை பீளமேடு விமான நிலையம் திகழ்கிறது. ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கும் பயனளித்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றபோதும் இன்று வரை ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப் படுகின்றன. இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் கரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
விமான நிலைய வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட விரிவாக்க திட்டம், நிலம் ஆர்ஜித பணிகளை தமிழக அரசு முடித்து கொடுத்த பின்னும் விமான நிலைய ஆணையகத்தின் ( ஏஏஐ ) முடிவிற்காக காத்திருப்பதால் திட்டம் முடங்கியுள்ளது. துபாய்க்கு விமான சேவை தொடங்க வலியுறுத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து பயணிகள் கூறும் போது, “கோவை விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவை தொடங்க பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிக விமானங்கள் இயக்கப் படுகின்றன. கோழிக்கோடு போன்ற கோவையை விட சிறிய நகரத்தில் இருந்து கூட தினமும் 2 அல்லது 3 விமானங்கள் துபாய்க்கு இயக்கப் படுகின்றன. நிலம் ஆர்ஜிதம் செய்த பின்னும் அவற்றை பெற்று வளர்ச்சி நடவடிக்கை மேற்கொள்ள ஏஏஐ தலைமையகம் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல” என்றனர்.
விமான பயண ஆர்வலர் எச்.உபைதுல்லாஹ் கூறும் போது, “இந்தியாவில் இருந்து துபாய்க்கு வாரந் தோறும் 65,000 வீதம் இரு நாட்டு விமான நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் 1,30,000 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கொச்சியில் இருந்து தினமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, பிளை துபாய், எமிரேட்ஸ் சார்பில் தினமும் 4 அல்லது 5 விமானங்கள் துபாய்க்கு இயக்கப்படுகின்றன. கோழிக் கோட்டில் இருந்து தினசரி மூன்று விமானங்கள் வரை துபாய்க்கு இயக்கப் படுகின்றன. மத்திய அரச நினைத்தால் கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை உடனடியாக தொடங்கலாம்” என்றார்.
கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கூறும்போது, “கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்துள்ளதுடன் அவற்றை ஏஏஐ மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது. கோவை விமான நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசுக்கு அக்கறையில்லை. கோவை மட்டுமல்ல தென்னிந்தியாவையே மத்திய அரசு புறக்கணிக்கிறது” என்றார்.
கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறும் போது, “கோவை - துபாய் இடையே விமான சேவை தொடங்க தற்போது வரை எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. விரிவாக்க திட்ட நிலம் பெறுவது தொடர்பாக ஏஏஐ தலைமையகத்திடம் இருந்து இறுதி முடிவு வரவில்லை” என்றார்.
