

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த முடிவுக்கு ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களில் 5 பேர் சாதமாக ஒப்புதல் அளித்தனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 5 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது. இந்நிலையில் நடப்பாண்டில் முதல் கூட்டத்திலும் முந்தைய வட்டி விகிதமே நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. பணவீக்கம் 4 சதவீத என்ற இலக்கை ஒட்டியே நிலவுவதாலும், பொருளாதாரம் மீண்டெழுவதாலும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.