

கோவை: ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களுக்கான ஏற்றுமதி சார்ந்த ‘ஆர்ஓஎஸ்டிஎல்’ திட்டத்தை 2026 மார்ச் வரை நீட்டிப்பு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் ( சைமா ) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சைமா தலைவர் சுந்தர ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதம் அளவில் ஜவுளித் துறை பங்காற்றி வருகிறது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 35 முதல் 37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் தேக்கமடைந்துள்ளது. கரோனாவின் இரண்டாவது அலைக்கு பின் உலக நாடுகளில் திடீரென ஏற்பட்ட தேவை காரணமாக கடந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கணிசமாக உயர்ந்தது. புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
உலக பொருளாதார அரங்கில் நமது நாட்டினருக்கு ஒரு சமதளத்தை உருவாக்கி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் உள்ளடங்கியுள்ள மாநில மற்றும் மத்திய வரிகளை திருப்பிச் செலுத்த ‘ஆர்ஓஎஸ்டிஎல்’ என்ற திட்டத்தை 2019-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி முதல் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கு சலுகைகளை அளிக்கிறது. முதலில் இத்திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, தற்போது 2026-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொலை நோக்கு சிந்தனையுடன் அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.