

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை இயந்திரப் பொறியாளர் வி.சுரேஷ் பாபு மற்றும் அதிகாரிகள், மின்சாரக் கார்களை ( இ - கார்கள் ) தொடங்கி வைத்தனர்.
இக்கார்கள் ஐந்தாண்டுக்கு குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் பெறப்பட்டுள்ளன. கார்களை வழங்குதல், ஓட்டுநர்களை நியமித்தல் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு போன்றவற்றை தனியார் நிறுவனமே மேற்கொள்ளும். இதன் மூலம் ஆண்டுக்கு, 14 டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியும். இக்கார்களுக்கு துறைமுகத்தில் உள்ள சூரியமின் ஆலை மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் பெறப்படும்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் 'கடற்சார் அமிரித் கல் தொலைநோக்கு -2047' திட்டத்தின் கீழ்,இந்திய துறைமுகங்கள் கார்பன் வெளியேற்றம் இல்லாத துறைமுகங்களாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வஉசி துறைமுக ஆணையத்தில், 5 மெகாவாட் சூரியமின் நிலையம், 2 மெகாவாட் காற்றாலை, 640 கிலோ வாட் மேற்கூரை மின்நிலையம், மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார்கள், 100 சதவீதம் எல்இடி ஒளி விளக்குகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
மேலும் வருங்காலங்களில், மின்சாரத்தால் இயங்கக் கூடிய பேருந்துகள் இயக்கவும், அனைத்து கப்பல்சரக்கு தளங்கள் மற்றும் சரக்கு பெட்டக முனையங்களில் கப்பல்களுக்கு தேவையான மின்சாரத்தை தளத்திலிருந்து வழங்கவும், பளுத்தூக்கிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் புதுப்பிக்கப்பட்ட எரி சக்தி மூலம் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.