

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தமிழக அளவிலான மிகப் பெரிய பூண்டு சந்தை உள்ளது. பொதுவாக உள்ளூரில் உள்ள பொருட்கள்தான் அந்தந்தப் பகுதிகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
போடியில் ஏலக்காய், ஈரோட்டில் மஞ்சள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் கோவா, ஊத்துக்குளியில் வெண்ணைய் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆனால், வடுகபட்டியில் பூண்டு விவசாயமே இல்லாத நிலையில் தமிழக அளவிலான பூண்டு வர்த்தகத்தை நிர்ணயிப்பதில் இச்சந்தை முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் அருகில் உள்ள கொடைக்கானல் மலைதான். அங்குள்ள வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரியமாகவே மலைப்பூண்டு விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது.
150 ஆண்டுகளுக்கு முன் திருவிழாக்களுக்கு வந்த விவசாயிகள் பூண்டுகளை பண்டமாற்று முறையில் கொடுத்து விட்டு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். இது அதிகரிக்கவே கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள வடுகபட்டியில் வியாபாரிகள் மலைப்பூண்டு கொள்முதலில் ஆர்வம் காட்டினர்.
விதைப்பு முதல் அறுவடை வரை பூண்டு விவசாயத்துக்கு குளிர் பருவநிலை அவசியம். அதன் பிறகு வெப்பம் தேவைப்படும். இப்பருவம் வடுகபட்டியில் இருந்ததால் மலையில் விளைந்த பூண்டுகளைத் தரைப் பகுதியான வடுகபட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கு உலர்த்தி, புடைத்து கழிவுகளை நீக்கி வியாபாரிகள் விற்பனை செய்யத் தொடங்கினர்.
இங்கு வர்த்தகம் அதிகரித்த தால் கடந்த தலைமுறையினர் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கொள்முதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அளவிலான பூண்டுச் சந்தையில் வடுகபட்டி பிரதான இடத்தைப் பிடித் துள்ளது.
பூண்டைப் பொருத்தளவில் இதன் மருத்துவ குணம்தான் இதன் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், வைட்டமின் ஏ, சி, இ உள்ளிட்டவை இருப்பதுடன், கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஆலிசின் என்ற வேதிப் பொருளும் உள்ளது.
மேலும் இதய நோய், வாயுக் கோளாறு, மூட்டுவலி உள்ளிட்டவற்றுக்கும் பெரும் நிவாரணியாகவும் விளங்குகிறது. இதனால் கரோனாவுக்குப் பிறகு வெள்ளைப் பூண்டின் பயன்பாடு உலக அளவில் வெகுவாக அதிகரித்துள்ளது.
பூண்டில் பல ரகங்கள் இருந்தாலும் ராஜாளி, பர்வி, காடி என்று மூன்று வகை பூண்டுகள்தான் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. இதில் முதல் ரகம்தான் கொடைக்கானல் மலைப்பூண்டு. இது பழுப்பு நிறத்துடன் மணம் நிறைந்து இருக்கும்.
இரண்டாம் ரகம் ஊட்டி பூண்டு. மூன்றாம் ரகம் ராஜஸ்தான், ஹிமாச்சல், உத்தரபிரதேசம், காஷ்மீர், சீனா உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பூண் டுகள். கடந்த ஆண்டின் இறுதியில் பூண்டுகள் சவுதி அரேபியா, ஜாம்பியா, மொரீஷியஸ், குவைத், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், இருப்பு வெகுவாய் குறைந்தது. மேலும் உற்பத்திக் காலமும் முடிந் ததால் பூண்டு வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் இதன் விலை சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
இதுகுறித்து பூண்டு வர்த்தகர் பரமசிவம் கூறியதாவது: வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பூண்டு சந்தை நடைபெற்று வருகிறது. உள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். பூண்டு வணிகம் பங்குச் சந்தை போன்றுள்ளது. விலை உச்சத்தைத் தொட்டு லாபத்தை அள்ளித் தருவதும் உண்டு. அதே நேரம் அதலபாதாளத்தில் விலை குறைந்து பெரும் இழப்பையும் ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
கொடைக்கானல், ஊட்டி நகரங்களில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் 400 டன் வரை பூண்டு வந்து கொண்டு இருந்தது. நேற்று வெறும் 30 டன் பூண்டே வந்துள்ளது. இதனால் வியாபாரம் வெகுவாய் பாதிப்படைந்துள்ளது. இதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான ஏற்றுமதியே இதற்கு முக்கியக் காரணம்.
வெளிமாநிலங்களில் பூண்டு தற்போது அறுவடைப் பருவத்தை நெருங்கி உள்ளது. சில வாரங்களில் வரத்து அதிகரித்து படிப்படியாக விலையும் குறையத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உச்சம் தொட்ட விலை: வடுகபட்டி சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நிலவரப்படி முதல் ரகம் ரூ.550, இரண்டாம் ரகம் ரூ.400, மூன்றாம் ரகம் ரூ.300 என விற்பனையாகின. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.200 வரை விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.