Published : 07 Feb 2018 08:14 AM
Last Updated : 07 Feb 2018 08:14 AM

பிட்காயின் விலை கடும் சரிவு: மூன்று மாதத்தில் 6,190 டாலராகக் குறைந்தது

மெய்நிகர் பணம் அல்லது கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றான பிட் காயினின் மதிப்பு கடந்த மூன்று மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20 சதவீத அளவுக்கு சரிந்தது. செவ்வாய்க்கிழமை அதன் மதிப்பு 6,190 டாலராகக் குறைந்தது.

நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை பிட் காயின் மதிப்பு இந்த அளவுக்கு சரிந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் இதன் மதிப்பு 26 மடங்கு அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பிட்காயின் மதிப்பு அதிகபட்சமாக 19,511 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது. பிட்காயின் பரிவர்த்தனை சட்ட விரோதம் என பட்ஜெட்டில் அறிவித்ததைத் தொடர்ந்து இதன் மதிப்பு மேலும் சரிந்தது. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இவை பயன்படுத்தப்படுவதால் முற்றிலுமாக நீக் கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அருண் ஜேட்லி கூறினார்.

ஜப்பானிய அதிகாரிகள் மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனை மையங்களில் சோதனை நடத்தினர். ஹேக்கர்கள் எனப்படும் கம்ப்யூட்டர் மூலம் தகவல் மற்றும் இதுபோன்ற கிரிப்டோ கரன்சிகளை திருடுவோரால் 53 கோடி டாலர் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சோதனை நடத்தப்பட்டது.

ஐரோப்பாவின் மத்திய வங்கி, அமெரிக்காவின் பெடரல் அமைப்பு உள்ளிட்டவையும் இது தொடர்பாக தங்களது அச்சத்தையும், பிட்காயின் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளன.

கிரிப்டோ கரன்சி மீதான தடை காரணமாக முதலீட்டாளர் மத்தியில் மெய்நிகர் கரன்சிகள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியதால் மதிப்பு சரிந்து வருவதாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பரிவர்த்தனை நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் இன்ஸ் தெரிவித்துள்ளார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x