

புதுச்சேரி: புதுச்சேரி ஆறுகளில் சுற்றுலா படகுகள் விட அனுமதி அளிக்கப்பட்டதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 10 கிராம உள்நாட்டு மீனவர்கள் கடும் பாதிப்பில் உள்ளதாக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பூரணாங்குப்பம், முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், ஆர்.கே.நகர் சிவலிங்கபுரம், சின்ன வீராம்பட்டினம், பெரிய வீராம்பட்டினம், முதலியார் பேட்டை, கீரப்பாளையம் ஆகிய ஊர்களில் வாழும் உள்ளூர் மீனவர்கள் தங்களது மீன் பிடித் தொழிலை சுண்ணாம்பாறு மற்றும் அரியாங்குப்பம் ஆறுகளில் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இந்த ஆறுகளில் கிடைக்கும் குறைந்த அளவு மீன்களை விற்று, தங்களது வாழ்வாதாரத்தை தேடி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள்.
இந்த நிலையில், இந்த மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுண்ணாம்பாற்றில் சுற்றுலா படகுகளை அரசு விட்டுள்ளது. இங்கே சுற்றுலா படகுகளை விடக் கூடாது என்றுஎதிர்ப்பு தெரிவித்த போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கு அரசில் வேலை தரப்படும் என்று கூறப்பட்டது. தற்போது அவர்களின் நிலை மோசமாகியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் எம்பியும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவருமான ராமதாஸ் கூறுகையில், “சுண்ணாம்பாற்றில் தொழில் செய்யாமல் இருந்த மீனவர்களுக்கு வேலையும் கொடுக்கவில்லை;. வாழ்வாதாரமும் அளிக்கவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அனைத்து உள்ளூர் மீனவர்களும் அரியாங்குப்பம் ஆற்றை நம்பி வாழ்க்கையை நகர்த்த தொடங்கினர். ஆனால் அந்த ஆறு தொழிற்சாலைகளின் கழிவுகளாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் மண்புழுக்கள் எடுப்பதாலும், சேறும் சகதியுமாக மாறி மீன்வளம் அழிந்து தொழில் செய்வதற்கு லாயக் கற்றதாகிவிட்டது. இந்த ஆற்றை அரசு சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை மத்திய அரசின் நீர்வளத் துறையிடம் பெறலாம் என்று நான் பலமுறை அரசுக்கு அறிவுறுத்தினேன்.
எம்எல்ஏ ஒருவரும் அக்கோரிக்கையை வைத்தார். ‘இந்த ஆறு சுத்தம் செய்யப்படும்’ என்று கூட அரசும் கூட ஒரு முறை பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால் வழக்கம் போல ஒன்றும் நடக்கவில்லை. இந்தச் சூழலில், தற்போது அந்த ஆற்றில் சுற்றுலாவுக்காக படகுகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொஞ்சம் நஞ்சம் இருந்த மீன்பிடி வளமும் தொழிலும் அழிந்து, உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போது மீன்வளத் துறை அமைச்சரும் முதல்வரும் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் சுற்றுலா படகுகளை இயக்குவதில் முனைப்பு காட்டுகின்றனர். ‘சுற்றுலா விரிவாக்கம்’ என்று கூறி, பாரம்பரியமாக இங்கு வாழும் மண்ணின் மைந்தர்களாகிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்குகின்றனர். இப்பகுதியில் சுற்றுலா படகுகளுக்கு கொடுத்துள்ள உரிமத்தை ரத்து செய்து அரியாங்குப்பம் ஆற்றை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, 10 கிராம மீனவர்களை வாழ வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தேசிய மீனவர் பேரவைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான இளங்கோ இதுபற்றி கூறுகையில், “புதுவையில் பாரம்பரியமாக கடல், ஆறுகளில் மீனவ குடும்பத்தினர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். ஆற்றில் கழிவு நீர் கலப்பதாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், மண் புழுக்களை எடுப்பதாலும் ஆறுகள் மாசுபட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தற்போது சுண்ணாம்பாற்றில் கேளிக்கை படகு சவாரிகள் விடப்பட்டுள்ளன. இதனால் உள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன், நண்டுகளின் இனப்பெருக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை சட்டங்களின் படி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆற்றுப் பகுதியிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் நுண்ணுயிர் இனங்களை பாதுகாக்க வேண்டும். இதற்கானசர்வதேச மற்றும் நம் நாட்டுச் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். இதற்கான ஆலோசனைகளை வழங்கி, அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தவிர வேறு எந்த கேளிக்கைகளுக்கும் அரியாங்குப்பம் ஆற்றுப் பகுதியில் அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.