ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியாவுக்கு 31 எம்கியூ-9பி ராணுவ ட்ரோன்கள்: விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவுக்கு 31 எம்கியூ - 9பி ராணுவ டிரோன்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது, அமெரிக்காவிடமிருந்து எம்கியூ 9 பி ட்ரோன்களை வாங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது விற்பனைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 3.99 பில்லியன் டாலர் (ரூ.33,110 கோடி) மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா 31 எம்கியூ - 9பி ட்ரோன்களை வாங்குகிறது. இவற்றில் 15 ட்ரோன்கள் கடற்படையுடன் இணைக்கப்படும். ராணுவம் மற்றும் விமானப் படைகளுக்கு தலா 8 ட்ரோன்கள் வழங்கப்படும்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கு 3.99 பில்லியன் டாலர் மதிப்பில் 31 எம்கியூ 9 பி ட்ரோன்களை விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாஅதன் ராணுவக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், இந்த நவீனரக ட்ரோன்கள் இந்தியாவின் ராணுவ மேம்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பு செலுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

எம்கியூ 9பி என்பது அதிநவீன வசதிகளைக் கொண்ட ராணுவ ட்ரோன் ஆகும். 40 மணி நேரம் இடைவிடாது பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன் எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது. அனைத்து காலநிலைகளிலும் இது இயங்கும். தொலைவில் இருந்தே துல்லியமாக படம் எடுக்கும். சத்தம் எழுப்பாமல் பறந்து குண்டு வீசும் வசதி இதில் உண்டு.

தற்போது ராணுவப் பயன்பாட்டில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், இந்திய ராணுவத்தில் அதிநவீன ட்ரோன்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in