

ஆண்டிபட்டி: தேனியில் குளிர் பருவநிலை வெகுவாய் மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இனிப்பு சுவையுடன் தாகம் தணிக்கும் தன்மை மிகுந்துள்ளதால் பலரும் இதனை ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மார்கழி, தை மாதம் முன் பனிக்காலமாகும். இருப்பினும் மார்கழியில் சில வாரங்கள் மட்டுமே பனியின் தாக்கம் இருந்தது. பின்பு மெல்ல பனி விலகத் தொடங்கியது. பொதுவாக மாசி,பங்குனி வரை பின் பனிக்காலம் தொடரும். ஆனால் முன்னதாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்க நிலையும் தொடர்கிறது.
பொதுவாக வெயில காலங்களில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை ஈடுகட்ட வெள்ளரி, தர்பூசணி உள்ள நீர்ச்சத்து காய்களும், பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். முன்னமே தொடங்கிய வெயிலின் தாக்கத்தினால் தர்பூசணி பழங்கள் மாவட்டத்துக்கு அதிகளவில் வரத் தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை, திண்டிவனம், வந்தவாசி, மேல்மருத்துவத்தூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இவை ஏராளமாக கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை வியாபாரிகள் வாங்கி ஆங்காங்கே சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இவை கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில்லறை விற்பனையாக பழங்களை கீற்று போட்டு ரூ.15-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இனிப்பு சுவையுடன் நீர்சத்தும் மிகுந்து இருப்பதால் பலரும் இதனை ஆர்வமாக வாங்கி உண்கின்றனர். பருவ காலத்துக்கு ஏற்ப சந்தைக்கு வரும் பழம், காய்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் பலரும் தற்போது தர்பூசணி வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். இதனால் இந்த 'தாகம் தணிப்பு' பழங்கள் சாலையோரங்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே விற்பனை செய்து வரும் சிவராமன் என்பவர் கூறுகையில், ''மலிவான விலையில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதில் தர்பூசணி முதலிடம் வகித்து வருகிறது. இப்பழங்கள் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்துள்ளது. 17ஆண்டுகளுக்கும் மேலாக தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக மணல் மேவி, கீற்று கொட்டகை அமைந்துள்ளேன்.
மேலும், பழங்களை சுற்றிலும் அவ்வப்போது நீர்த்தெளித்து குளிர்ச்சியாகவும் வைக்க வேண்டும். இதனால் வெப்பம் அதிகம் தாக்காமல் பழத்துக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமலும், சுவை மாறாமலும் இருக்கும். பல ஆண்டுகள் இவ்வியாபாரத்தில் உள்ளதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர். பலரும் பழங்களை மொத்தமாகவும் வாங்கிச் செல்கின்றனர். மழை, வெள்ளத்தினால் தர்ப்பூசணி செடிகள் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டு விலை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது'' என்றார்.