Published : 02 Feb 2024 09:17 AM
Last Updated : 02 Feb 2024 09:17 AM

எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை: கோவை தொழில் துறையினர் @ பட்ஜெட் 2024

கோவை: மத்திய நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ( எம்எஸ்எம்இ ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம்: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் ( டாக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்: சிறு தொழில்களுக்கு எவ்விதமான அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்படாதது, சார்ப்பாஸ் சட்டத்தின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள 6 மாதங்கள் கால அவகாசம் நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருந்த நிலையில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் ( காட்மா ) தலைவர் சிவக்குமார்: தொழில் தொடங்க வட்டி இல்லாகடன் வழங்குவதற்கு ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி ) எம்எஸ்எம்இ முக்கிய பங்கு வகிக்கிறது என அறிவித்த போதும் இத்துறை வளர்ச்சிக்கு அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ( சீமா ) தலைவர் விக்னேஷ்: வீடுகளுக்கு சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்தின் உதவியுடன் 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை, மின்சார பேருந்து, ரயில்வே திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. எம்எஸ்எம்இ மற்றும் உற்பத்தித்துறைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் ( சைமா ) தலைவர் எஸ்.கே.சுந்தர ராமன்: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது என்ற இலக்கை நோக்கிய ஒன்றாக பட்ஜெட் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய பருத்தி கழகத்திற்கு பருத்தி கொள் முதல் செய்ய நிதி ஒதுக்கீடு, பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைகளுக்கு தரக்கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க ( கோப்மா ) தலைவர் மணி ராஜ்: ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் குறைந்துள்ளதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்காதது வருத்தமளிக்கிறது. பட்ஜெட்டில் மூலப் பொருட்கள் விலை உயர்வு குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ஸ்ரீராமலு: நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் வீடு கட்டுவதற்கு உதவி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்துதல், விமான நிலைய விரிவாக்க திட்டங்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை கம்ப்ரஷர் தொழில் துறை சங்கத்தின் தலைவர் ரவீந்திரன்: வங்கி கடனுதவி, உரிய காலத்தில் பண வரவுகள் பெறுதல், சந்தைப் படுத்துதல், புதிய தொழிற்பேட்டைகளுக்கு சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு மேம் பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

சர்வதேச தொழில் முனைவோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்: மருத்துவம், கல்வி, விவசாயம், ஸ்டார்ட் அப் போன்ற அனைத்து முதன்மை துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. வளர்ச்சியை உள்ளடக்கிய பட்ஜெட். நிதிப் பற்றாக்குறையை 5.1 சதவீதமாக கட்டுக்குள் வைத்திருப்பது பொறுப்புள்ள அணுகு முறையை வெளிப்படுத்துகிறது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் ( சிஐஐ ) கோவை தலைவர் செந்தில் கணேஷ்: கோவை விமான நிலைய விரிவாக்கதிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்பு குறு, சிறு தொழில் முனைவோருக்கு பயன் தரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x