

புதுடெல்லி: வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஃபாஸ்டேக் சேவை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆர்பிஐ உத்தரவுகள் பயனர்களின் சேவைக் கணக்குகள், வாலட்கள், ஃபாஸ்டேக் மற்றும என்சிஎம்சி கணக்குகளின் வைப்புத் தொகைகளை பாதிக்காது. அவர்கள் ஃபாஸ்டேக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு புதன்கிழமை ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பேடிஎம் நிறுவனம் ஃபாஸ்டேக் கணக்குகளில் உள்ள பணத்தை பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆர்பிஐ நடவடிக்கையைத் தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் லிமிட். (OCL) பல்வேறு வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது. அதில், "ஒசிஎஸ் மற்றும் பேடிஎம் பேமென்ட்ஸ் சர்வீஸ் லிமிட். (பிபிஎஸ்எல்)-ன் நோடல் கணக்குகளை பிப்ரவரி 29-க்குள் நிறுத்துமாறு வந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தக் காலகட்டத்துக்குள் ஒசிஎல் மற்றும் பிபிஎஸ்எல் நோடல்களை மற்ற வங்கிகளுக்கு மாற்றும். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கட்டண சேவைகளை வழங்க ஒசிஎல் பிற வங்கிகளுடன் இணைந்து செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆர்பிஐ உத்தரவைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் ஃபாஸ்டேக் சேவை நிறுத்தம் என்ற வதந்தியை மறுத்துள்ள பேடிஎம் நிறுவனம், அதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில், "உங்கள் ஃபாஸ்டேக் கணக்கில் ஏற்கெனவே உள்ள தொகையினை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிற வங்கிகளுடன் இணைந்து செயல்படும் பயணத்தை தொடங்கி உள்ளோம். இப்போது அது இன்னும் வேகப்படுத்தப்படும். தடையற்ற வாடிக்கையாளர்கள் சேவை அனுபவத்தை உறுதி செய்ய சாத்தியமான தீர்வுகளில் பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
பேடிஎம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய தகவலின்படி, பிபிபிஎல் 1.24 கோடி ஃபாஸ்டேக் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.