மதுபானங்களின் விலை பிப்.1 முதல் உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

மதுபானங்களின் விலை பிப்.1 முதல் உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பிப்.1-ம் தேதி உயர்வதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகளும், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.

அரசின் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு. இந்நிலையில், தற்போது, டாஸ்மாக் கடைகளில், சாதாரண ரக குவார்ட்டர் பாட்டில் ரூ.130. ஆஃப் பாட்டில் ரூ.260, ஃபுல்

பாட்டில் ரூ.520 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே நடுத்தர வகை மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், பிப்.1-ம் தேதி முதல் மதுபாட்டில்களின் மீதான விலை உயர்வை அமல் படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 180 மி.லி கொண்ட அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375மி.லி., 750மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் 500மி.லி., 325மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்.

அதன்படி, சாதாரண, நடுத்தர ரக மதுபானங்கள் குவார்ட்டருக்கு ரூ.10-ம், ஆஃப்-க்கு ரூ.20-ம் புல் பாட்டில் ரூ.40-ம் உயரும். இதே போல், உயர் ரக மதுபானங்கள் குவார்ட்டருக்கு ரூ.20-ம், ஆஃப்க்கு ரூ.40-ம், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80-ம் உயரும். ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படும் நிலையில், தற்போது இந்த விலை உயர்வு மதுப்பிரியர்களின் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in