Published : 14 Feb 2018 06:01 PM
Last Updated : 14 Feb 2018 06:01 PM

ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்: ‘எம்ஐ டிவி 4’ ஸ்மார்ட் டிவி வெளியீடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 புரோ மொபைல் போன்கள், 2018ம் ஆண்டு புத்தாண்டு வரவாக வெளியாகியுள்ளன. இதுபோலவே ஸியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி, ‘எம்ஐ டிவி 4’ இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான போன்களில், ஸியோமியின் ரெட்மி நோட் 4 ஒன்றாகும். இதன் புதிய வடிவமாக ரெட்மி நோட் 5 இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கெனவே அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி, ஸியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை, காதலர் தினமான இன்று அறிமுகம் செய்துள்ளது.

இதில், ரெட்மி நோட் 5 ரூ. 9,999 விலையில், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. 11,999 விலையில், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் திறனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டது.

ரெட்மி நோட் 5 புரோ ரூ. 13,999 விலையில் கிடைக்கிறது. இது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டது. அதுபோலவே ரூ, 16,9999 விலையுள்ள ரெட்மி நோட் 5 புரோ, 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டது.

ரெட்மி நோட் 5 புரோ ஸ்மார்ட் போன், 12 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா டூயல் ரியர் கேமரா கொண்டது. 20எம்பி செல்பி ஸூட்டர் வசதிகளும் கொண்டது, அதுபோலவே ஸியோமி ஸ்மார்ட் போன்களிலேயே ‘பேஸ் அன்லாக்’ வசதியும் உள்ளது. இதுவரை தொடுதிரை மூலம் அன்லாக் வசதி இருந்த நிலையில், உரிமையாளரின் முகத்தினை அடையளம் கண்டு அன்லாக் செய்யும் வசதி இந்த போனில் இடம் பெற்றுள்ளது. அதுபோலவே அதிகபட்ச டிஸ்பிளே வசதி இதன் சிறப்பு அம்சமாகும்.

புதிய போன் அறிமுக விழாவில் பேசிய ஸியோமி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மனு குமார் ஜெயின் கூறியதாவது:

‘‘இந்தியாவில் ஆன்லைன் மூலம் நடைபெறும் மொபைல் போன் விற்பனையில் எங்களின் பங்கு 57 சதவீதமாகும். கடைகளில் அதிகம் விற்பனையாகும் மொபைல் போன்களிலும், இரண்டாவது இடத்தில் ஸியோமி நிறுவனம் உள்ளது. கடைகள் மூலம் நடைபெறும் விற்பனையில் 9 சதவீத அளவிற்கு எங்கள் போன்கள் விற்பனையாகின்றன. கடந்த 2017ல் எங்கள் நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 மொபைல் போன்கள் 96 லட்சம் எண்ணிக்கையில் ஏற்றுமதியாகியுள்ளன’’ எனக்கூறினார்.

 

ஸியோமியின் எல்இடி டிவி

இதுமட்டுமின்றி ஸியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் எல்இடி டிவியும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ‘‘எம்ஐ டிவி 4’’ என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி 55 இஞ்ச் திரை மற்றும் 4 கே பேனல், எச்டிஆர்10 வசதிகளுடன் வடிவமைககப்பட்டுளளது. 4.9 எம்எம் அளவில் மெலிதானதாகவும் இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 39,999 ரூபாயாகும். முதன் முதலாக ‘பேச் வால்’ மென்பொருள் வசதியும் இந்த டிவியில் இடம் பெற்றுள்ளது.

2017ம் ஆண்டின் கடைசி காலாண்டில், ஸியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் 26.8 சதவீத அளவிற்கு இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளதாக சர்வதேச புள்ளி விவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x