

மதுரை: மதுரை ரயில்வே மைதானத்தில் கோட்ட மேலாளர் ஸ்ரீ ஷரத் வஸ்தவா தேசிய கொடியை ஏற்றி பேசும்போது, கோட்டத்தில் அனைத்து பிரிவிலும் 11.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என, தெரிவித்தார்.
நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி, மதுரை ரயில்வே காலனி ரெட் பீல்டு மைதானத்தில் கோட்ட மேலாளர் ஸ்ரீ ஷரத் வஸ்தவா தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவில் அவர் பேசியதாவது: நடப்பு நிதியாண்டில் (2023-24) அனைத்து பிரிவு வருவாயில் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 11.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம். டிசம்பர் வரை வருவாய் கடந்தாண்டு இதே காலத்தில் ரூ.800 கோடியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 894 கோடி ஆகும்.
சரக்கு வருவாயில் இவ்வாண்டு 17.67 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. 2022-23ல் ரூ.242 கோடியுடன் ஒப்பிடுகையில், தற்போது ரூ.285 கோடியாக உள்ளது. 2023 டிசம்பர் வரை 2.5 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளோம். 2022-23 நிதியாண்டில் இது 2.2 மில்லியன் டன்னாக இருந்தது. பயணிகளை பொறுத்தவரையிலும், டிசம்பர் வரை 8.79 மில்லியன் பேர் கையாளப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.541 கோடி வருவாயை ஈட்டியுள்ளோம். கடந்த ஆண்டு வருவாய் ரூ. 502 கோடி. பயணிகள் சேவை முன்னணியில் உள்ளோம்.
மதுரை கோட்டத்தில் வந்தே பாரத் ரயிலை நெல்லை - சென்னை எழும்பூர் இடையே அறிமுகப்படுத்தியது மதுரை, ராமேசுவரம் ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. விருதுநகர், காரைக்குடி, மணப்பாறை, பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, புனலூர், பழனி, திருச்செந்தூர், சோழவந்தான் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் பணி நடக்கிறது. சிவகங்கை, குமாரமங்கலம், கல்லல், தாமரைப்பாடி, கீரனூர், திருமங்கலம், கிளிகொல்லூர் உள்ளிட்ட 7 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் உயர்த்தும் பணி முடிந்தது.
துப்பசெட்டி, திருமயம், வெள்ளனூர், அய்யலூர், ஆறுமுகநேரி, கடம்பூர், குமாரமங்கலம், செட்டிநாடு, கீரனூர், கிளிகொல்லூர், பூங்குடி உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் கால்வாய் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்மயமாக்கல்: நடப்பு நிதியாண்டில் இதுவரை 16.75 கிலோமீட்டர் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது, இது கோட்டத்தில் மொத்த மின்மயமாக்கப்பட்ட 1,295 கிலோ மீட்டர் களில் 85 சதவீதமாக உள்ளது. மதுரை - போடி 90 (கி.மீ) இடையேயான பணி மார்ச் 2024-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் - ராமேசுவரம் பிரிவு (53 கி.மீ.) முடிந்த பிறகு, கோட்டம் 100 சதவீத மின்மயமாக்கல் இலக்கை எட்டும். மதுரை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) மூலம் ரயில் நிலையங்களின் வளாகங்களில் 138 குழந்தைகளை மீட்கப்பட்டனர். குற்றச் செயல்புரிந்த 69 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.