

மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தி ஒரு மாதத்துக்கு ஐந்து முறை பணம் எடுக்க முடியும். இந்த எண்ணிக்கையை 2 தடவையாக குறைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் கிராமப்புறங்களில் இந்த சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்த உத்தரவு அமலுக்கு வரும்போது மூன்றாவது முறை மற்ற வங்கி ஏடிஎம்-மை பயன்படுத்தினால் 20 ரூபாய் செலுத்தவேண்டி இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தவிர்த்து மற்ற ஏடிஎம்மை பயன்படுத்தும் போது அந்த வங்கிக்கு வாடிக்கையாளர் வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கிறது.
இதை தவிர்ப்பதற்காகவே இலவச பரிவர்த்தனைகள் குறைக்கப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த கட்டணம் 10 சதவீதத்துக்கு மேல் அதிகமாக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் வாடிக்கையாளார்கள் தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். 2009-ம் ஆண்டு மற்ற வங்கி ஏடிஎம்களை ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அல்லது 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏடிஎம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 74,000 என்ற அளவில் இருந்த ஏடிஎம்களின் எண்ணிக்கை இப்போது 1.6 லட்சத்துக்கு மேல் இருக்கிறது.