Published : 28 Nov 2017 10:16 AM
Last Updated : 28 Nov 2017 10:16 AM

ஆன்லைன் ராஜா 03: ஆன்லைன் நிறுவனங்களை அடித்து நொறுக்கும் ஜாக் மா

சீ

னாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஹாங்ஸெள (Hangzhou) நகரம். ஸெஜியாங் (Zhejiang) மாநிலத்தின் தலைநகரம். சீனாவின் நான்காவது பெரிய நகரம், இங்கிருக்கும் மேற்கு ஏரி (West Lake) உலகப் புகழ் பெற்றது. 2000 வருடங்கள் முன்பாகவே இருப்பதாக வரலாறு சொல்கிறது. இதன் 86,450 ஏக்கர்கள் பிரம்மாண்டப் பரப்பில், ஷெனிஸம் என்னும் சீனப் புராதன மதக் கோவில்கள், புத்த விகாரங்கள் (Pagodas), அழகிய பூங்காக்கள். ” மேற்கு ஏரி மனிதனுக்கும், இயற்கைக்குமிடையே உருவாக்கப்பட்டிருக்கும் லட்சிய சங்கமம். பல நூறு ஆண்டுகளாகச் சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் பூங்காக்கள் வடிவமைப்பில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது” என்று புகழ்மாலை சூட்டும் ஐ.நா சபையின் பிரிவான யுனெஸ்கோ (UNESCO), மேற்கு ஏரியை, உலகப் பாரம்பரிய மையங்களில் (World Heritage Centre) ஒன்றாக அறிவித்திருக்கிறது.

ஹாங்ஸெள நகரில் மா லைஃபா (Ma Laifa), க்யூ வென்க்காய் (Cui Wencai) தம்பதிகள். மா லைஃபா புகைப்படக்காரர். அம்மா க்யூ வென்க்காய் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். ஏழ்மைக் குடும்பம். முதலில் ஆண் குழந்தை. இரண்டாவதாக செப்டம்பர் 14, 1964 – இல் இன்னொரு மகன். மூன்றாவதாகப் பெண். இரண்டாம் மகனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் மா யுன் (Ma Yun).``மா” என்பது குடும்பப் பெயர். (இவர்தான் ஜாக் மா. சொந்தப் பெயரை இன்று எல்லோருமே மறந்துவிட்டார்கள். ஆகவே, நாமும் ஜாக் மா என்றே குறிப்பிடுவோம்.)

ஜாக் மா பிறந்த காலம். சீனாவுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கம்யூனிஸ்ட் சித்தாந்தம் தொடர்பாகத் தீவிரக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. சீனக் குடியரசுத் தலைவராக இருந்த மாசேதுங், அமெரிக்க, ஐரோப்பியக் கலாச்சாரங்களால்தான் ரஷ்யா பாதை மாறுவதாக நினைத்தார். சீனாவின் பாரம்பரியத்தையும், கம்யூனிசத்தையும் பாதுகாக்கும் அறிவிப்போடு, 1966 – இல் கலாச்சாரப் புரட்சி என்னும் நடவடிக்கை தொடங்கினார். இதன்படி, மாவோயிச சித்தாந்தத்துக்கு ஒத்துப்போகாத ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டன. பேச்சு, எழுத்து, நாடக சுதந்திரத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டது. அறிவுஜீவிகளும், கலைஞர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், படுகொலை செய்யப்பட்டார்கள். வெளிநாடுகளோடு இருந்த உறவுகள் முறிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பயங்கர வீழ்ச்சி கண்டது. ஜாக் மாவின் குடும்பம் ஏற்கெனவே ஏழ்மை. நாட்டின் நிலைமை அவர்களை இன்னும் படுகுழியில் தள்ளியது.

இது போதாதென்று, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது மாதிரி, ஜாக் மா இன்னும் பல பிரச்சினைகளை உருவாக்கினான். வால்பையன். எப்போதும் ஏதாவது விஷமம் செய்துகொண்டேயிருப்பான். வெட்டுக்கிளிகளைப் பிடித்து ஒன்றோடொன்று சண்டை போடவைத்து ரசிப்பான். அவன் உயரம் குறைவானவன். ஒல்லிப் பிச்சான். அடிதடி சண்டை போடாத நாளே கிடையாது. அதுவும், தன்னைவிட வயதிலும், உருவத்திலும் பெரியவர்களோடு. ஒரு முறை ரத்தக் காயம், அம்மா அலறியடித்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினாள். பதின்மூன்று தையல்கள்.

அப்பா அடித்து நொறுக்குவார். அம்மா ஆதங்கத்திலும், கோபத்திலும் திட்டுவாள்,``உன் அண்ணனையும், தங்கையும் என் வயிற்றில் பிறந்தார்கள். உன்னை நான் குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கி எடுத்தேன்.”

பள்ளிக்கூடம் போகத் தொடங்கினான். அவன் நடத்தையில் முன்னேற்றம் வரும் என்று பெற்றோர் நினைத்தார்கள். ஏமாற்றம். தன் குறும்புகளை அரங்கேற்ற அவனுக்குக் கிடைத்த இன்னொரு களம் அது. படிப்பில் சராசரிக்கும் கீழே. கணக்கு சுட்டுப்போட்டாலும் வரவில்லை. அடிதடி ராஜா என்பதால் ஜாக் மாவைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். அவன் தான் லீடர். இவர்கள் அடிக்கும் லூட்டியில் வகுப்பு அலறும்.

ஜாக் மாவுக்கு இருந்த ஒரே விருப்பம், கராத்தே, குங்ஃபூ போன்ற மார்ஷியல் ஆர்ட்ஸ். அவற்றால்தானே, அவன் போன்ற நோஞ்சானால் சீனியர் பசங்களைத் தோற்கடிக்க முடியும்? ஆங்கிலம் வாசிக்கும் சரளம் வந்தபோது, ஜின் யாங் (Jin Yong)எழுதிய புத்தகமும், வாளும் என்னும் நாவல் படித்தான். மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரன் பற்றிய கதை. அசந்து போனான். அவர் எழுதியிருந்த பிற 14 நாவல்களையும் தேடிப் பிடித்துப் படித்தான். அத்தனையிலும் கராத்தே, குங்ஃபூ வீரர்கள் கதாநாயகர்கள், ஜாக் மா தன்னை அவர்களாகக் கற்பனை செய்துகொள்வான்.

ஜாக் மாவின் அம்மா, அப்பா இருவருக்கும் கலை நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் உண்டு. பிங்டான் (Pingtan) என்னும் கலை நிகழ்ச்சிக்கும், ஆப்பரா (Opera) என்னும் சீனப் பாரம்பரிய நாடகங்களுக்கும் மகனைக் கூட்டிக்கொண்டு போவார்கள். பிங்டான் நம் கதா காலேட்சேபம் மாதிரி. கதை, இசை உண்டு. தூக்கலாகவே ஜோக்ஸ். ஜாக் மா இன்று பேசும்போது நகைச்சுவை கொப்பளிக்கும். சிறுவயதுப் பிங்டான் பாதிப்பு.

சீன ஆப்பராக்கள் சரித்திர, இசை, நாட்டிய நாடகங்கள். தமிழ்நாட்டில், ஆர். எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன், திருநாவுக்கரசர் நாடகங்கள் போல் இவற்றில் கதை, நடிப்பு, பாட்டு, ஈட்டி, வாள் சண்டைகள், மந்திர தந்திரக் காட்சிகள் உண்டு. இவற்றோடு, சீன மரபுக்கேற்ற மல்யுத்தம், கராத்டே, குங்ஃபூ, கழைக்கூத்தாடி சாகசங்கள் எனப் பல்வேறு அம்சங்கள். ஜாக் மா தவறாமல் ஆப்பரா பார்க்கப்போவான். பெரும்பாலும் அவனுக்குக் கதை புரியாது. திறந்த வாய் மூடாமல் ரசித்தது டிஷ்யூம் டிஷ்யூம் தான்.

சிறு வயது ஆப்பராக்கள் உருவாக்கிய ஷோமேன்ஷிப்பும், மார்ஷியல் ஆர்ட்ஸ் காதலும் இன்னும் தொடர்கின்றன என்று ஜாக் மா நிரூபிக்கும் சமீப நிகழ்ச்சி.

நவம்பர் 10, 2017. ஷாங்காய் நகரின் மெர்சிடஸ் பென்ஸ் அரங்கம். 18,000 பேர் உட்காரும் பிரம்மாண்டம். அழைப்பிதழ் கொண்டுவரும் வி.ஐ.பி – க்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் கெடுபிடி. லேசர் விளக்குகளின் மாயாஜாலம், மேடை தகதகக்கிறது. நிகழ்ச்சிப் பொறுப்பாளர், டேவிட் ஹில் பல ஆஸ்கர் விழாக்களின் சூத்திரதாரி. மின்னலாய்ச் சுழன்று ஏற்பாடுகளைக் கடைசி நிமிட மேற்பார்வை செய்துகொண்டிருக்கிறார்.

இருக்கைகள் நிரம்பிவிட்டன. திடீரெனப் பரபரப்பு. அரங்கம் அதிரும் கை தட்டல். அங்கே வந்துகொண்டிருப்பது, ஜாக் மா. அவரோடு, ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன், டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ஆண்டுக்கு ஒரு நாள் அலிபாபா நடத்தும் ஒரு நாள் அதிரடித் தள்ளுபடி விற்பனைத் திருவிழாவை ஆரம்பித்து வைக்கப்போகும் முதன்மை விருந்தாளிகள்.

நிகழ்ச்சி தொடங்குகிறது. நாடி நரம்புகளில் உற்சாகமூட்டும் இசை, நடனம், திடீரென நிசப்தம். அரங்க விளக்குகள் மங்கலாகின்றன. ராட்சசக் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்களில் பளிச் வெளிச்சம். சினிமா, சினிமா. சீனப் படம். இது என்ன அலிபாபாவின் விளம்பரப் படமா? கொஞ்சம் சலிப்போடு எல்லாக் கண்களும் திரையில். சில விநாடிகள் அந்தக் கண்கள் ஆச்சரியத்தால் விரிகின்றன.

வருகிறது டைட்டில்

ஆங்கிலத்தில் Gong Shou Dao. தமிழில் தற்காப்புக் கலையும், பாதுகாப்பும். ஹீரோ ஜாக் மா. கடந்த முப்பது வருடங்களாக அவர் பயிற்சி எடுத்துவரும் டாய்ச்சி என்னும் தற்காப்புக் கலை மாஸ்டர் வேடம். குங்ஃபூ, கராத்தே, வுஷூ, மல்யுத்தம் ஆகிய சண்டைக்கலைகளில் உலகப் புகழ்பெற்ற ஜெட் லீ, வூ ஜிங், டோனி ஜா, ஜாக்கி ஹ்யூங் சோ, ஆஷ்ஹோருயு அக்கினோரி ஆகியோரோடு சண்டைபோட்டு அவர்களைப் பந்தாடுகிறார். (ஜாக்கி சான் ஜாக் மாவிடம் தோற்க மறுத்துவிட்டாரோ? அதனால்தான் படத்தில் நடிக்கவில்லையோ?)

படம் முடிந்தவுடன் ஜாக்கி மாவுக்கு ஆரவாரக் கைதட்டல்கள்.

22 நிமிட முழுப்படமும் பார்க்கவேண்டுமா? இதோ லிங்க்: https://www.youtube.com/watch?v= u5QWgeIo9J0&t=19s

ஏழு நிமிட ட்ரெய்லர் மட்டும் போதுமா? இதோ லிங்க். https://www.youtube.com/watch?v= qEpobkBO7rs

இந்தப் படம் வெறும் சினிமா மட்டும்தானா? அல்லது, உங்களையும் இப்படித்தான் துவம்சம் பண்ணப்போகிறேன் என்று அமேசானுக்கும், மற்ற இ-காமர்ஸ் கம்பெனிகளுக்கும் வீசும் சவாலா? ஜாக் மா குறும்புக்காரர். இதையும் செய்வார், இதற்கு மேலும் செய்வார்.

slvmoorthy@gmail.com

(குகை இன்னும் திறக்கும்)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x