Published : 16 Feb 2018 07:46 AM
Last Updated : 16 Feb 2018 07:46 AM

ரூ.11,300 கோடியை திருப்பி அளிக்க வேண்டும்: பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

நீரவ் மோடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 30 வங்கிகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,300 கோடியைத் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் வங்கித் துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், நிதிச் சந்தையில் குழப்பம் ஏற்படும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.போதுமான அளவு நிதி இல்லை என்பதால் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் தலையீட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி நாடலாம் எனத் தெரிகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,300 கோடியை இதர வங்கிகளுக்கு அளிக்கும் பட்சத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்கு வழக்குகள் மட்டுமே பாதிக்கப்படும். தவறும் பட்சத்தில் 30 வங்கிகளுக்கும் பெரிய இழப்பாக இருக்கும். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தத் தொகையை கட்டாயம் மற்ற வங்கிகளுக்கு தரவேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தொகையைத் தர பஞ்சாப் நேஷனல் வங்கி காலதாமதம் செய்யும் பட்சத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் தலையீட்டை ரிசர்வ் வங்கி நாடும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நீரவ் மோடி விவகாரம் இந்திய வங்கித்துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும். நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி நிறுவனத்தின் வெளிநாட்டு வைர இறக்குமதிகளுக்கான பணத்தை வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தருமென பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணியாளர்கள் சிலர் போலியான உறுதியளிப்புக் கடிதம் அளித்ததாகத் தெரிகிறது. இதை நம்பி சில இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகள் கோடிக்கணக்கான டாலரை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடனாகக் கொடுத்தன.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நாஸ்ட்ரோ கணக்கில் குவிந்த இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு கைமாறி இருக்கிறது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில் இந்த மோசடி 2010-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நீரவ் மோடி குழுமம் மற்றும் கீதாஞ்சலி குழுமத்தின் செயல்பாடுகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும், இது போன்ற உத்திரவாதங்கள் 90 நாட்களுக்குத்தான் செல்லுபடியாகும் என்ற ரிசர்வ் வங்கியின் வரையறைகளை மற்ற வங்கிகள் அலட்சியம் செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றச்சாட்டியுள்ளது.

இந்த வாதத்தை மற்ற வங்கிகள் மறுத்துள்ளன. ஊழியர்களின் மோசடிகளின் விளைவுகளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கிதான் பொறுப்பு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x