

புதுச்சேரி: காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், 10 ரூபாய் நாணயத்துக்கு ஒரு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விளம்பரத்தை பார்த்து,10 ரூபாய் நாணயத்துடன் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு நேற்று காலை 10 மணி முதலேயே 100-க்கும் மேற்பட்டோர் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மதியம் 12.30 மணியளவில் 10 ரூபாய் நாணயம் பெறப்பட்டு நபர் ஒருவருக்கு ஒரு பிரியாணி வழங்கப்பட்டது. ஆனாலும் சிலமணி நேரத்தில் அந்த ஓட்டலில் பிரியாணி காலியானது. நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பிரியாணி இல்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆத்திர மடைந்த பொது மக்கள் ஓட்டல் ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வரிசையில் நின்றவர்களுக்கிடையே தள்ளு முள்ளும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களையும் திருப்பி அனுப்பினர்.