

சென்னை: விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்துக்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்டு விவகாரம் வைரல் ஆன நிலையில் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமான பாதுகாப்பு ஆணையம் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் எம்ஐஏஎல் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.90 லட்சம் எம்ஐஏஎல் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையில் ரூ.1.20 கோடி விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. மீதமுள்ள 30 லட்ச ரூபாய் அபராதத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதித்துள்ளது.
என்ன நடந்தது? அண்மையில் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6E 2195 விமானத்தில் இருந்த பயணிகள் விரைந்து அதிலிருந்து வெளியேறினர். தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்த காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலானது. இந்த சூழலில் இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு தெரிவித்தது.
கோவாவில் இருந்து டெல்லி சென்ற இந்த விமானம் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லியில் தரையிறங்க விமானங்கள் திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் குறித்த நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிலவிய மூடுபனி காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில் ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்பட்ட டார்மாக் பகுதியில் அமர்ந்துள்ளனர். அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதில் தோல்வியை தழுவினர் என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.