அர்ஜென்டினா - இந்தியா இடையே லித்தியம் சுரங்க ஒப்பந்தம்: சீன இறக்குமதி குறையும்
புதுடெல்லி: மின்சார வாகனங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்களில் லித்தியம் பேட்டரிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2020-21 ஆண்டில் இந்தியா ரூ.6,000 கோடிக்கும் மேல் லித்தியம் இறக்குமதி செய்தது. இதில் சீனாவில் இருந்து மட்டும் ரூ.3,500 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அமெரிக்கா தலைமையில் தாது பாதுகாப்பு கூட்டு அமைப்பு (எம்எஸ்பி) கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பின்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் கானிஜ் பிதேஷ் இந்தியா நிறுவன்ம் (கபில்) மற்றும் கேம்யென் என்ற நிறுவனமும் கூட்டாக இணைந்து அர்ஜென்டினாவின் கேட்டமர்கா மாகாணத்தில் 15,703 ஹெக்டேரில் உள்ள 5 லித்தியம் சுரங்கத்தில் ஆய்வு மற்றும் லித்தியம் எடுக்கும் ஒப்பந்தத்தை ரூ.200 கோடி மதிப்பில் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் லித்தியம் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பத்தை பெற உதவும். இந்த ஒப்பந்தம் லித்தியம் விநியோகத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு உதவும் என இதில் நேற்று கையெழுத்திட்ட நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
