

மேட்டூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கொங்கணாபுரம் வாரச் சந்தையில் ஆடுகள், கோழிகள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனி வாரச்சந்தை நேற்று கூடியது. பொங்கல் பண்டிகை நாளை ( 15-ம் தேதி ) கொண்டாடப்படவுள்ள நிலையில் சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16,000 ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.5,250 முதல் ரூ.8,000 வரையும், 20 கிலோ எடையுள்ள வெள்ளாடு, செம்மறி ஆடு ரூ.10,600 முதல் ரூ.16 ஆயிரம் வரையும், 30 கிலோ ஆடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதேபோல், 5,800 பந்தயச் சேவல், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை, ரூ.2,500 முதல் ரூ.8,500 வரை விற்கப்பட்டன.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி கால் நடைகளுக்கான அலங்காரப் பொருட்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. சந்தையில் நேற்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பருத்தி ஏலம்: திருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தின் கிளை கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. பி.டி. ரகம் குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.7,209, டிசிஎச் ரகம் ரூ.9,200 முதல் ரூ.10,419, கொட்டு ரகம் ரூ.3,750 முதல் ரூ.4,500 வரை ஏலம் போனது. மொத்தம் 1,800 மூட்டை பருத்தி ரூ.45 லட்சத்துக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.