

மதுரை: இயற்கை விவசாயம் மூலம் நஞ்சில்லா காய்கறி களை விளைவித்து விற்பனை செய்வதோடு, மற்ற விவசாயிகளுக்கும் வழிகாட்டி வருகிறார் மதுரை அருகே பேரையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே குப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.மவுனகுரு நாதன் (50). ஆட்டோ ஓட்டுநரான இவர், நஞ்சில்லா காய்கறிகளை விளைவிக்கும் நோக்கில் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளார்.
இவர் தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், சுமார் 2 ஏக்கரில் காய்கறிகள் விவசாயம் செய்து வருகிறார். மன திருப்திக்காக செய்தவர், தற்போது வருவாய் ஈட்டுவதோடு, மற்ற விவசாயிகளுக்கும் வழிகாட்டி வருகிறார். மேலும், இயற்கை இடுபொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்களது குடும்பம் விவசாயக் குடும்பம். சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளேன். ஆட்டோ ஓட்டும்போது பெரும்பாலும் விவசாயிகளுக்கு உரங்கள் ஏற்றிச் சென்று இறக்கவும், காய்கறிகள், நெல்மூட்டைகளை ஏற்றி இறக்கவும் செல்வேன்.
அப்போது, விவசாயிகள் அதிகமாக ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தியும், அதற்காக அதிகமாக செலவிட்டும் அதற்கேற்ற லாபம் கிடைக்கவில்லை என புலம்புவார்கள். அப்போது, ரசாயன உரங்களின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். இதற்காக, நாட்டு மாடுகள் வளர்க்க தொடங்கினேன்.
அதிலிருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தக் கரைசல், மீன் அமிலங் கள் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் தயாரித்து செலவின்றி விவசாயத்தில் ஈடுபட்டேன். கத்தரிக்காய், வெண்டைக் காய், மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டேன்.
எனது மனைவி பத்மாவதி எனக்கு உறுதுணை யாக உள்ளார். யூடியூப் மூலம் பல விஷயங்களை கற்றேன். தற்போது, செலவின்றி காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்து வருகிறேன். உசிலம்பட்டி சந்தையில் ஏலம் முறையில் விற்று வருகிறேன். ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது. என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கும் வியாபாரிகள், அவற்றை கேரளாவுக்கு அனுப்பு கின்றனர்.
நஞ்சில்லா காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்யும்போது மனதுக்கு திருப்தி கிடைக்கிறது. வரும் காலங்களில் கூடுதலாகப் பயிரிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். எனது வயலை பார்வையிட வரும் விவசாயிகளுக்கும், இயற்கை உரங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன் என்றார்.