

கோவை: அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் கரோனா ஊரடங்கு புரட்டிப்போட்டுவிட்டது. வீட்டுக்குள்ளேயே மக்களை சிறைவைத்து, வறுமையைக் கொண்டு கரோனா வதைத்தது. மத்திய, மாநில அரசுகளின் பல ஊரடங்கு உத்தரவுகளைக் கடந்து, தற்போதுதான் அதன் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்லமெல்ல மீண்டு வருகின்றனர். ஆனால் கரோனா ஊரடங்கிலேயே மாட்டுச் செக்கு எண்ணெயை அறிமுகம் செய்து, தற்போதுவரை சாதித்து வருகிறார் கோவை மருதமலை சாலை கல்வீரம்பாளையத்தில் வசித்துவரும் பட்டதாரி விவசாயி கவுதமன்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளேன். விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனவே, விவசாயமே எனது பிரதான தொழிலாக உள்ளது. பழங்காலத்தில் நம் முன்னோர் மாட்டுச் செக்கால் ஆட்டிய எண்ணெயைத்தான் பயன்படுத்தி வந்தனர். அதன்பின் இயந்திர செக்கு எண்ணெயின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்நிலையில்தான் நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி, முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அப்போது ஒருநாள் எனது நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, பயனற்றுக் கிடந்த பழங்கால செக்குக்கல்லை எப்படியாவது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நினைத்தேன். இந்த செக்குக்கல் 1957-ம் ஆண்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை எண்ணெய் பிழிவதற்காக, என் முன்னோர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, செக்குக்கல்லை எடுத்து சுத்தப்படுத்தினேன். இதில், மாட்டுச் செக்கு எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யலாம் என்ற யோசனை வந்தது. இயந்திர செக்கு எண்ணெய் வகைகளுக்கு மக்கள் வரவேற்பு அளித்த நிலையில், மாட்டுச் செக்கு எண்ணெயையும் மக்கள் கண்டிப்பாக விரும்புவர் என்பது என் நம்பிக்கை.
ஏனெனில் இயந்திரத்தில் தயாரிக்கப்படும் எண்ணெயைவிட, மாட்டுச் செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு தரம், வாசம், அடர்த்தி அதிகம். அதேபோல, எண்ணெய் தயாரிக்கும்போது சூடாகாது என்பதால் நல்ல நுண்ணுயிரிகள் அழியாது.
மாட்டுச்செக்கில் தயாரித்த எண்ணெயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உடல்சோர்வு, உடல்வலி, மூட்டுவலி நீங்க வாய்ப்புள்ளது. எளிதில் செரிமானம் ஆகும். தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்தால் உடல் குளிர்ச்சியடையும், தலைமுடி கருமையாக வளரும். தோல் பளபளப்பாக இருக்கும்.
இதையெல்லாம் விசாரித்து அறிந்தபிறகு, இத்தொழிலில் முழுமையாக ஈடுபட தொடங்கினேன். என் மனைவியின் பணிநிமித்தமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, கோவைக்கு வரநேர்ந்தது. இங்கு வந்ததும், 2-வது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கல்வீரம்பாளையத்தில் தங்கியிருந்து, எனது தந்தையின் நினைவாக மணி மாட்டுச்செக்கு எண்ணெய் என்ற பெயரில் இத்தொழிலை தொடர்ந்து வருகிறேன். இதற்காக வாடகைக்கு நிலம் பிடித்து, களம் தயார்படுத்தினேன்.
மூலிகைத்தன்மை கொண்ட கல்வாகை என்ற மரத்தைத்தான் எண்ணெய் பிழிய பயன்படுத்துகிறேன். எண்ணெயை நன்றாக பிரித்து கொடுக்கவும், எள், தேங்காய், கடலையில் உள்ள சத்துகள் குறையாமல் பாதுகாக்கவும் கல்வாகை மரம் பயன்படுகிறது.
காங்கயம் இனத்தை சேர்ந்த எருது ரக மாடுகளை செக்கு ஓட்ட பயன்படுத்துகிறேன். இவ்வகை மாடுகள் பெரும்பாலும் வண்டி ஓட்டவும், உழவு ஓட்டவும் மட்டுமே பயன்படும். 3 மாத காலம் பிரத்யேகமான சில பயிற்சிகள் கொடுத்து, இந்த மாடுகளை செக்கு ஓட்ட நான் தயார்படுத்தியுள்ளேன்.
செக்கு ஓட்ட இந்த மாடுகளுக்கு உடலுக்கு வலிமை தேவை என்பதால், 2 கிலோ பருத்திக்கொட்டையுடன், உமி தவிடு, துவரம்பருப்பு மற்றும் உளுந்தில் புட்டுசெய்து உணவாக கொடுத்து வருகிறேன்.
கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து தரமான தேங்காய் பருப்பு, நாட்டுக் கடலை, எள் ஆகியவற்றை வாங்கி வந்து பயன்படுத்துகிறேன். காலை 4 மணிக்கு மாடுகளை தயார்படுத்தி பணியை தொடங்குவேன். நண்பகல் 12 மணி வரை பணி நடைபெறும்.
இந்த செக்கில் கடலை, எள், தேங்காய் என எதுவாக இருந்தாலும் 30 கிலோ வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு மணி நேரம் செக்கில் ஆட்டினால், 12 லிட்டர் வரை எண்ணெய் கிடைக்கும். இதே இயந்திரத்தில் ஆட்டினால் 20 நிமிடங்களில் எண்ணெய் கிடைத்துவிடும். இந்த வேக வேறுபாடுதான் மாட்டுச்செக்கு எண்ணெயின் சிறப்பு.
செக்கில் ஆட்டும்போது வரும் கசடுநீங்க, எண்ணெயை 3 நாட்கள் வரை வெயிலில் வைத்திருப்பேன். தேங்காயை பதப்படுத்துவதற்காக சல்பர் பயன்படுத்துவதில்லை. நல்ல தேங்காய் எண்ணெய், பனி காலத்தில் உறையாது. சல்பர் பயன்படுத்தினால் ஓரளவுக்குத்தான் உறையும்.
எண்ணெயில் சிக்குவாடை எளிதில் வரக்கூடாது என்பதற்காக, எலுமிச்சை சாறை பயன்படுத்தி வருகிறேன். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பல நாட்கள் எண்ணெயில் சிக்குவாடை வராமல் தடுக்கும்.
எண்ணெய் பிரித்தெடுத்தபின் கிடைக்கும் சக்கைகளை காயவைத்து, மாடுகளுக்கு உணவாக அளிக்கலாம். தேங்காய் சக்கையில் பன், பர்பி தயாரிக்கக்கூட பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), விளக்கெண்ணெயை பாரம்பரிய முறையில் மாட்டுச்செக்கில் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
நாகரீக மாற்றத்தால் பழமையை மறந்து, இயந்திர வாழ்க்கைக்கு மக்கள் மாறி இருந்தனர். உண்ணும் உணவு பொருட்கள், பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறின. தற்போது மீண்டும் பழமையின் மகத்துவம் உணர்ந்து, பழமைக்கே மாறி வருகின்றனர். இதன்காரணமாக இயந்திர செக்கு எண்ணெயைவிட, விலை சற்றே அதிகம் என்றாலும் மாட்டுச் செக்கு எண்ணெய்க்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஒரு லிட்டர் முதல் 10 லிட்டர் வரை இந்தியா முழுவதும் கூரியர் மூலம் எண்ணெய் அனுப்ப தயாராக உள்ளேன். கூரியர் செலவு வாடிக்கையாளர்களுடையது. மொத்த விற்பனை, கடைகளுக்கு விற்பனை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.