Published : 28 Dec 2023 10:35 AM
Last Updated : 28 Dec 2023 10:35 AM

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 லட்சம் டன் உப்பு

தூத்துக்குடியில் உப்பளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்பு முழுமையாக வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு, மூடப்பட்டிருந்த பாலித்தீன் ஷீட் மட்டும் எஞ்சி கிடக்கிறது. | படம்: என்.ராஜேஷ் |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 6 லட்சம் டன் உப்பு மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. உப்பளங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி இருந்து வருகிறது. இங்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. 1,200 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு உற்பத்தியில் நாட்டில் 2-வது இடத்தில் தூத்துக்குடி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 35 ஆயிரம் தொழிலாளர்கள் உப்பள தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்திக்கான காலமாகும். இந்த ஆண்டும் வழக்கம்போல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், அக்டோபர் மாதத்தில் உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. அதில் 10 லட்சம் டன் அளவுக்கு உப்பு இருப்பில் இருந்தது. இந்த உப்பை உற்பத்தியாளர்கள் உப்பளங்களில் குவித்து வைத்து, பாலித்தீன் ஷீட் போட்டு மூடி வைத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை மாவட்டத்தின் அனைத்து தொழிலையும் புரட்டி போட்டது போல, உப்பள தொழிலையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்பு குவியல்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. மேலும், உப்பளங்களிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உப்பள உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் டி.சந்திரமேனன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை உப்பளங்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான 6 லட்சம் டன் உப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்திக்கு உப்பளங்களை தயார் செய்ய வழக்கமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்வோம். தற்போது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வரும் சீசனில் உப்பு உற்பத்தி மூன்று மாதங்கள் வரை தாமதமாகி ஏப்ரல் மாதம் தான் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது சுமார் 4 லட்சம் டன் உப்பு மட்டுமே இருப்பில் உள்ளது. இது பிப்ரவரி மாதம் வரை போதும் என நினைக்கிறோம். மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கினால் சமாளித்துவிடலாம். தாமதமானால் வெளியிடங்களில் இருந்து தான் உப்பு கொண்டுவர வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உப்பளங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உப்பு உற்பத்தியாளர்களின் கடன் தவணை மற்றும் வட்டியை மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும். உப்பள பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், மின் பாதைகள், தொலை தொடர்பு அமைப்புகளை விரைவாக சீரமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலத்தை மூன்று மாதம் நீட்டிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மனுவாக மத்திய நிதியமைச்சரிடம் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x