Published : 25 Dec 2023 06:14 PM
Last Updated : 25 Dec 2023 06:14 PM
தஞ்சாவூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, வீடுகளில் பொங்கல் வைக்க புதுப்பானை, புத்தரிசி வரிசையில் தஞ்சாவூரில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் புத்தடுப்புகளும் (மண் அடுப்புகள்) மும்முரமாக தயாராகி வருகின்றன. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. பொங்கல் விழாவின் போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண்ணாலான புதிய பானைகளை வைத்து, அதில் வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். மேலும், வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலும் புதிய மண் அடுப்புகளையே பயன்படுத்துவர்.
பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் பொங்கலிட மண்பானைகளுடன் மண் அடுப்புகள் தயாரிப்பதில் தஞ்சாவூர் கீழவாசல், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செய்யப்படும் மண் அடுப்புகள் சூளையில் சுடப்பட்டு, பின்னர் ஒருவாரம் கழித்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
இதுகுறித்து மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் கூறியது: பொங்கல் பண்டிகையில் புதிய மண்பாண்ட அடுப்பில் தான் பொங்கல் வைப்பார்கள். அதற்காக அடுப்புகள் தயாரித்து வருகிறோம். தனி அடுப்புகள், கொதி அடுப்புடன் கூடிய இரட்டை அடுப்புகள் தயாரித்து வருகிறோம். இந்த அடுப்புகள் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்கப்படுகின்றன. பொதுமக்களும் ஆர்வமுடன் இந்த அடுப்புகளை வாங்குவர். தற்போது பனிக்காலமாக இருப்பதால் அடுப்பு தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT