

சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் லஞ்ச வழக்கில் புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் துணைத்தலைவர் நீரஜ் சிங்காலை சில நாட்களுக்கு முன்பு சிபிஐ கைது செய்தது.
இந்த நிலைமையில் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு 51 வங்கிகள் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள். இந்த கடன் கேள்விக்குறியாகி இருக்கிறது.
வொர்க்கிங் கேபிடலுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமையில் வங்கிகள் கடன் கொடுத்திருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையில் இன்னும் சில வங்கிகள் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கின்றன.
இந்த நிலைமையில் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளின் சந்திப்பு நிகழும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுத்திருக்கிறது.
புஷான் ஸ்டீல் சிறப்பாக செயல்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருப்பது வங்கிக்கு நல்ல சொத்து என்றார். இந்த நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு ஒரு ஏஜென்சியை நியமிக்கப்போவதாக ஒரு ஆலோசனை இருக்கிறது. இதற்கு கடன் கொடுத்த வங்கிகள் தரப்பில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இதை புஷான் ஸ்டீல் இயக்குநர் குழுவுக்கு எடுத்து செல்வோம் என்று பட்டாச்சார்யா தெரிவித்தார்.
இதற்கு முன்பு தொழிற்சாலையில் ஒரு விபத்து நடந்தபோது, பாதுகாப்புக்கு ஒரு ஆலோசகரை நியமிக்குமாறு கேட்டோம்.
அதேபோல இதிலேயும் எந்த பிரச்சினையும் வராது என்றே நினைக் கிறோம் என்றார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனம் புஷான் ஸ்டீல். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 20 லட்சம் டன்கள் உற்பத்தி செய்கிறது.
வியாழன் அன்று புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 2ம் தேதி சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 12 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
வங்கிகளுக்கு அதிக அளவு கடனை நிலுவையில் வைத்திருப்பது இரும்பு மற்றும் ஸ்டீல் துறை நிறுவனங்கள்தான்.