

புதுடெல்லி: மாநில அரசுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பகிர்வின் கூடுதல் தவணைத் தொகை ரூ.72,961.21 கோடியை முன்கூட்டியே விடுவித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி விடுவிக்கப்பட வேண்டிய இந்த வரி பகிர்வு தவணைத் தொகை, டிசம்பர் 11-ம் தேதியே விடுவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடி, பிஹாருக்கு ரூ.7,338.44 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, மேற்கு வங்கத்துக்கு 5,488.88 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.4608.96 கோடி, ராஜஸ்தானுக்கு 4,396.64 கோடி, தமிழகத்துக்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகள், வருடப் பிறப்பு ஆகியவை வர உள்ளதால், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.